காயல்பட்டினம் கடற்கரையோர ஆக்கிரமிப்புகள், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி ஆகியவற்றை அகற்றக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம், சட்டவிதிமுறைகளை மீறி உருவாக்கப்பட்டுள்ள குருசடியை அகற்றுவது சம்பந்தமாகவும், கடற்கரையோரம் - அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து உருவாகியுள்ள குடித்தனங்களை அப்புறப்படுத்த கோரியும் - திருச்செந்தூர் கோட்டாட்சியர் திரு கணேஷ குமாரிடம் கோரிக்கை மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, 05.06.2017. திங்கட்கிழமையன்று கொடுக்கப்பட்டன.
==============
குருசடி அப்புறப்படுத்துதல்
==============
காயல்பட்டினம் கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, பெண்கள் அமரும் பகுதிக்கு அருகே - மத்திய - மாநில அரசுகளின் விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிவற்றுக்கு எதிராக உருவாகியுள்ள குருசடியை அப்புறப்படுத்த கோரி - திருச்செந்தூர் வட்டாச்சியர் உட்பட மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கு, கடந்த மார்ச் மாதம் முதல், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் *அரசாணை (G.O.(Ms).No.540; Revenue [LD6(2)] Department; Dated: 04.12.2014)* படி, ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பெறப்படும் மனுக்களை, வட்டாச்சியர் - 60 தினங்களுக்குள், முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குருசடி சம்பந்தமான புகார் கொடுக்கப்பட்டு 60 தினங்களுக்கு மேல் ஆகியும், ஆத்தூர் வருவாய் ஆய்வாளருக்கு விசாரணை செய்ய எழுதிய கடிதத்தை தவிர எவ்வித நடவடிக்கையும் திருச்செந்தூர் வட்டாச்சியர் எடுக்கவில்லை.
எனவே - அரசாணை தெரிவித்துள்ளப்படி, அடுத்த கட்டமாக, *கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சர்வே துறையின் துணை ஆய்வாளர்* அடங்கிய *மேல்முறையீட்டு குழுவிடம்*, இது சம்பந்தமான மேல்முறையீட்டு மனு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
=============
கடற்கரையோரம் ஆக்கிரமிப்பு குடித்தனங்கள்
=============
காயல்பட்டினம் கடற்கரையோரம் - பூங்காவிற்கு வடக்கே, கொம்புத்துறை வரை - அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, பல்வேறு குடித்தனங்கள் உருவாகியுள்ளன. இக்குடித்தனங்கள் - CRZ விதிமுறைகளை மீறியும் அமைந்துள்ளன. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த திங்களன்று, மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கைக்காக மனு சமர்ப்பிக்கப்பட்டது.
அம்மனுவிற்கு பதில் வழங்கியுள்ள திருச்செந்தூர் கோட்டாட்சியர், *ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், மாற்றாக அவர்களுக்கு நகராட்சி மூலமாக இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.*
ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், நகராட்சி மூலமாக வீடு வழங்கப்படும் என தெரிவித்திருப்பது ---
_ஏற்கனவே பலருக்கு சுனாமி காலனியில் இடம் வழங்கப்பட்டுவிட்டது என்ற காரணத்திற்காகவும்,_
_கடற்கரையோர ஆக்கிரமிப்புகளை வெறும் ஆக்கிரமிப்புகளாக பார்க்கக்கூடாது, அதில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இணைந்துள்ளன என்ற காரணத்தாலும்,_
_மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 படி, இது போன்ற கட்டுமானங்களுக்கு நகராட்சியின் நிதியை பயனப்டுத்த வழியில்லை என்பதாலும்,_
_இவ்வாறு தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்களுக்கு வீடுகள் வழங்குவது, இது போன்ற சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும் என்ற காரணத்தாலும், ஏற்புடையதல்ல என்று - அம்மனுவில் - தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: ஜூன் 5, 2017; 10:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|