தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோயம்புத்தூர் மண்டல மேலாண்மை இயக்குநரை, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் சந்தித்து, அம்மண்டலத்திலிருந்து காயல்பட்டினம் வந்து செல்லும் பேருந்துகளின் குறைகள் குறித்து முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அவ்வழித்தடத்தைப் புறக்கணித்து, மாற்றுப் பாதையில் செல்வது குறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகள் மாற்றுப் பாதையில் செல்வதைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – துவக்கமாக, கடந்த ஜனவரி மாதத்திலும், இரண்டாவதாக மே மாத இறுதியிலும் 24 மணி நேர தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டது.
பின்னர், அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களை (MANAGING DIRECTORs) நேரடியாகச் சந்தித்து - வழங்குவது என முடிவு செய்யப்பட்டு, அதன்படி திருநெல்வேலி, மதுரை, கும்பக்கோணம் ஆகிய மண்டலங்களின் மேலாளர்களை “நடப்பது என்ன?” குழுமம் கடந்த வாரங்களில் நேரடியாகச் சந்தித்து, இக்கண்காணிப்புகளின் முடிவுகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பித்து, அவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
அந்த வரிசையில், அன்றாடம் 8 பேருந்துகள் மூலம், 16 சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல மேலாண்மை இயக்குநர் திரு. பாண்டி அவர்களை, “நடப்பது என்ன?” குழுமம் 27.07.2017. வியாழக்கிழமையன்று நேரில் சந்தித்து, கண்காணிப்பு அறிக்கையையும், குறைகளைக் களையக் கோரும் மனுக்களையும் வழங்கி, அவை குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மே மாத கண்காணிப்பில் - கோவை மண்டலத்தின் மொத்த 16 பேருந்துகளில் 5 பேருந்துகள் மட்டுமே காயல்பட்டினம் வழித்தடத்தில் சென்றுள்ளமை குறித்து முறையிடப்பட்டது.
தொடர்ந்து, கோவையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் இதர உயரதிகாரிகளையும் “நடப்பது என்ன?” குழுமம் சந்தித்து, பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருந்து ஓட்டுநர்கள் - நடத்துநர்களிடம் மீண்டும் சுற்றறிக்கை வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டள்ளதாக அதன்போது தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து – அரசிடமிருந்து சில நாட்களுக்கு முன்பு சில அறிவுரைகள் வந்திருப்பதாகவும் கூறினர்.
மேலும், இனியும் இப்பிரச்சனை நீடித்தால் - உயரதிகாரிகளை உடனடியாகத் தொடர்புகொண்டு தெரிவிக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 28, 2017; 6:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|