தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் சென்று மீள்முறையீடு செய்துள்ளதையடுத்து, கும்பகோணம் மண்டலத்தின் புதுக்கோட்டை பிரிவு ஆய்வாளர்கள் 2ஆவது முறையாக பேருந்து கண்காணிப்பு நடத்திச் சென்றுள்ளதோடு, “நடப்பது என்ன?” குழுமத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அவ்வழித்தடத்தைப் புறக்கணித்து, மாற்றுப் பாதையில் செல்வது குறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் காயல்பட்டினம் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படும் – திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், கோவை ஆகிய 4 மண்டலங்களின் தலைமை அலுவலகங்களில், அவற்றின் மேலாண்மை இயக்குநர்களை நேரடியாகச் சந்தித்து, “நடப்பது என்ன?” குழுமத்தால் காயல்பட்டினத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ள - பேருந்து 24 மணி நேர தொடர் கண்காணிப்பின் அறிக்கையுடன், கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, இப்பிரச்சினை குறித்து வாய்வழி விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குநர் அலுவலகத்திலிருந்து – அக்கழகப் பேருந்துகள் காயல்பட்டினம் வழித்தடத்தில் முறையாக இயக்கப்படுவதைக் கண்காணிக்க, தமது துணை மேலாளருக்கு (வணிகம்) (DM Commercial) மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் மண்டலத்தின் புதுக்கோட்டை பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் - 28.07.2017. வெள்ளிக்கிழமையன்று மாலையில், ஆறுமுகநேரி சந்திப்பில் நேரடியாக கண்காணிப்பு செய்யவுள்ளதாக, அதன் ஆய்வாளர் வைத்தியலிங்கம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும் – மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் தலைவருமான பீ.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ்-வை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார்.
இத்தகவலையடுத்து, தெரிவிக்கப்பட்ட நேரத்தில் – போக்குவரத்து ஆய்வாளர்களை – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் ஆறுமுகநேரி சந்திப்பில் நேரடியாகச் சந்தித்து, தமது கோரிக்கை விபரங்களைத் தெரிவித்தனர்.
கும்பகோணம் மண்டலத்தின் புதுக்கோட்டை பிரிவு ஆய்வாளர்களான அவர்கள் – ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் தாம் மேற்கொண்ட ஆய்வு குறித்து தெரிவித்தனர். அந்த ஆய்வறிக்கை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு மேலாண்மை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட விபரம் அவர்களிடம் அப்போது தெரிவிக்கப்பட்டது.
‘புதுக்கோட்டை மண்டல பேருந்துகள் அனைத்தும் காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும்’ என சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த சுற்றறிக்கையை – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுக்கு விரைவில் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்.
கும்பகோணம் மண்டல பேருந்துகள் அனைத்திலும் காயல்பட்டினம் ஸ்டேஜ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 30, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|