கட்டிட உரிமம் பெறாத பொது நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், விரைந்து உரிமம் பெற்றிடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் (உரிமம்) சட்டம் 1965-இன்படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் (பயிற்சி பள்ளிகள் மற்றும் பயிற்சி கல்லூரிகள் உட்பட), நூலகங்கள், சங்கங்கள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள், விடுதிகள், சத்திரங்கள்; மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், மருந்தகங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களும் மற்றும் தரை தளம் 100 சதுர மீட்டர் (1074 ச.அ) கொண்ட பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுக்கட்டிடங்களுக்கும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இதுநாள் வரை உரிமம் பெறவில்லை எனில் அதற்கான உரிமம் பெற மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் இயங்கும் கட்டிடங்களுக்கு உரிமம் பெற உரிமம் வழங்கும் அலுவலர்களான சார் ஆட்சியர், தூத்துக்குடி மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், திருச்செந்தூர் / கோவில்பட்டி ஆகியோரையும்,
இதர தனியார் பொதுக்கட்டிடங்களுக்கான உரிமம் பெற உரிமம் வழங்கும் அலுவலரான சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திடவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
திருமண மண்டபம், சினிமா தியேட்டர், ஹோட்டல், கிளப்புகளுக்கு (ஒரு பிளாக்குக்கு) ரூபாய்.5000/- தனியார் பள்ளிகளுக்கு ரூபாய்.1000/- மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ரூபாய்.500/- உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள நபா;கள் உரிய காலக் கெடுவிற்குள் அதனைப் புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும். உரிய உரிமம் பெறாமல் எந்தக் கட்டிடத்தையும் பொதுக்கட்டிடமாக பயன்படுத்தக்கூடாது.
உரிமம் பெறாமலோ, காலாவதியான உரிமத்துடனோ பொதுக் கட்டிடங்கள் செயல்பட்டு வந்தால் அவை தடை செய்யப்படுவதோடு கட்டிட உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|