காயல்பட்டினம் கடற்கரையோரம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அகற்றம் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு முதலாவது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - பொது மக்கள் அமரும் பூங்கா பகுதிக்கு வடக்கே, கடயக்குடி ("கொம்புத்துறை"), கற்புடையார்பள்ளி வட்டம் ("சிங்கித்துறை"), "அண்ணா நகர்" ஆகிய பகுதிகளில் - அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து பல்வேறு கட்டுமானங்கள், விதிமுறைகளை மீறி உருவாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் முதல் இப்பிரச்சனையை - சட்டத்திற்கு புறம்பான குருசடி அகற்றல், சட்டத்திற்கு புறம்பாக குருசடிக்கு வழங்கப்பட்டுள்ள மின்னிணைப்பை துண்டித்தல், CRZ விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அகற்றல் மற்றும் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்துதல் என நான்கு வகையாக பிரித்து, இப்பிரச்சினைகள் குறித்து - சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பிவருகிறது.
குருசடியை அப்புறப்படுத்துவது குறித்து அரசாணை எண் 540 படி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக வட்டாட்சியர் (60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை), கோட்டாட்சியர் (30 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை) ஆகியோருக்கு மனு வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் - அரசாணை வழிகாட்டுதல்படி, இரண்டாவது மேல்முறையீடாக - மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO) - கடந்த ஜூலை 10 அன்று மனு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடற்கரையோரம் உள்ள இதர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கோரி - வட்டாச்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மே இறுதியில் நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது. திங்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு, கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு, கோட்டாட்சியர் மூலமாக இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
இம்மனு வழங்கப்பட்டு 60 தினங்கள் ஆகியும், அரசாணைப்படி வட்டாச்சியர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், முதல் மேல்முறையீடு - கோட்டாட்சியருக்கு (RDO) - நடப்பது என்ன? குழுமம் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. 30 தினங்களுக்குள், கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் துணை சர்வே அலுவலர் அடங்கிய குழு இம்மனு மீது - அரசாணை எண் 540 படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 4, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|