காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், கடையக்குடி (கொம்புத்துறை)யிலுள்ள பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் கலந்துகொண்டு, சுகாதார உறுதிமொழி வாசகத்தை முன்மொழிய, மாணவ-மாணவியர் அனைவரும் அதை வழிமொழிந்தனர்.
பின்னர் உரையாற்றிய அவர், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறி, இந்நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு தத்தம் இல்லங்களில் அனைத்து மாணவர்களும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியையர், அலுவலர்கள், மாணவ-மாணவியர் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும், வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
நேற்று பள்ளிப் பாட வேளை நிறைவுற்றதும், அனைத்து வகுப்பறைகளிலும் – காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க மருந்துப் புகையடிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்களை இவ்வாறு ஓரிடத்தில் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் சென்று சேரும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாகவும், நகரின் அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை நடத்திட திட்டம் உள்ளதாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டினம்.காம் இடம் கூறினார்.
|