2015 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று - நகர்மன்றத்தலைவரின் ஒப்புதல் இல்லாமல், துணை தலைவர் தலைமையில் - காயல்பட்டினம் நகராட்சியில் கூட்டம் நடந்தது. சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக நடந்த இக்கூட்டத்தில், ஏறத்தாழ 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் - சாலைகள் உட்பட 43 பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் - இக்கூட்டம் அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுரையின்படி கூட்டப்பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் - உறுப்பினர்கள் மேற்கோள்காட்டிய அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்
தலைமையிலான கூட்டத்தில் - ஒவ்வொரு உறுப்பினர் வார்டுக்கும் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நிறைவேற்றப்படவேண்டும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் - உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் ஒரு சில வார்டுகளுக்கு எவ்வித பணியும் ஒதுக்கப்படவில்லை, ஒரு சில
வார்டுகளுக்கு 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான பணிகளே ஒதுக்கப்பட்டிருந்தது. சுகு என்ற ரங்கநாதன் உறுப்பினராக இருந்த 12 வது வார்டுக்கு மட்டும்
- 66 லட்ச ரூபாய்க்கும் மேலான பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - காயல்பட்டணம்.காம் இணையதளம் கேட்ட கேள்விக்கு - இந்த கூட்டப்பொருளில் இடம்பெற்றிருந்த
பணிகளுக்கான மதிப்பீடுகளை - காயல்பட்டினம் நகராட்சியின் பொறியியல் துறை தயாரிக்கவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த
பணிகளுக்கான மதிப்பீடுகளை உறுப்பினர்களே தயாரித்திருந்தனர்.
மேலும் - இந்த கூட்டப்பொருளில் இடம்பெற்றிருந்த சாலைகளில் பெருவாரியானவை PAVER BLOCK வகை சாலைகளாகும். இவ்வகை
சாலைகளுக்கான - நகராட்சி நிர்வாகத்துறை (CMA) கடைபிடிக்கும் SCHEDULE OF RATE விபரங்கள் என்ன என எழுப்பப்பட்ட தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு - PAVER BLOCK சாலைகளுக்கு SCHEDULE OF RATE கிடையாது என்ற தகவல் -
காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு பதிலாக வழங்கப்பட்டது.
மதிப்பீடு தயாரிக்க SCHEDULE OF RATE இல்லாத பட்சத்தில் எந்த அடிப்படையில், இந்த தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள பொருள்களுக்கு -
உறுப்பினர்களால், மதிப்பீடு தயாரிக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுந்தது.
PAVER BLOCK சாலைகளுக்கு காயல்பட்டினம் நகராட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட மதிப்பீட்டிற்கும், அருகில் உள்ள பிற உள்ளாட்சிமன்றங்களில்
கடைபிடிக்க மதிப்பீடுகளுக்கும் - சுமார் 40 சதவீதம் வித்தியாசம் காண முடிந்தது. சுமார் 2.5 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளுக்கு,
3.5 கோடி ரூபாய் என்ற மதிப்பீட்டில் - தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஜூலை 27, 2015 அன்று - துணைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடப்பதற்கு முன்பு - இந்த கூட்ட பொருட்களில் இடம்பெற்றுள்ள சாலைகள்
குறித்த விபரங்களை அப்போதைய நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், அப்போதைய ஆணையர் காந்திராஜனிடம் கேட்டிருந்தார். அந்த தகவல்கள்
அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்த கூட்டம் நடப்பதற்கு முன்பும், பிறகும் - மாவட்ட ஆட்சியர் உட்பட தமிழக அரசின் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்,
நகர்மன்றத்தலைவர் - இது சட்டத்திற்கு புறம்பான கூட்டம் என்றும், இதனை நடத்த அனுமதிக்க கூடாது என்றும், நடத்தப்பட்ட பிறகு -
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் ரத்து செய்யப்படவேண்டும் என கோரியும் - கடிதம் எழுதினார்.
இது சம்பந்தமாக அரசு தரப்பில் இருந்து பதில்கள் பெறப்படாத சூழலில் - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், நீதிமன்றத்தை நாடவே - சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை - ஆகஸ்ட் 3, 2015 அன்று - இத்தீர்மானத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது.
இந்த வழக்கில் எதிர்தரப்பாக - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர்,
நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி ஆணையர் என ஆறு நபர்கள்
இணைக்கப்பட்டிருந்தனர்.
இடைக்கால தடை வழங்கப்பட்ட சில தினங்களில், தடையை நீக்க - ஆணையர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் - தலைவர் அனுமதியில்லாமல் துணைத்தலைவர் கூட்டம் நடத்த சட்டத்தில் அனுமதியுள்ளதா என்ற கேள்விக்கான விடை மாநிலம்
முழுவதும் உள்ள உள்ளாட்சிமன்றங்களை பாதிக்கக்கூடிய விஷயம் என்பதால் - அரசு தரப்பில் இணைக்கப்பட்ட இதர நபர்கள், தங்கள் பதிலை
தாக்கல் செய்வது அவசியமானது. வழக்கு நடந்த இரண்டாண்டிலும் - அவர்கள் தரப்பில் எவ்வித பதிலும் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்படவில்லை.
இந்த சூழலில் - கடந்த ஜூலை 20 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது - துணைத்தலைவர் தரப்பு தவிர அனைத்து தரப்பு
வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மஹாதேவன்,
"தற்போது தலைவர், துணைத்தலைவர், இதர பொறுப்புகள் (உள்ளாட்சிமன்றங்களில்) இல்லை என்பது அனைவரும் அறிந்தது. அதனால் - இவ்வழக்கில் அடுத்து எந்த ஆணையும் பிறப்பிக்க தேவையில்லை என நீதிமன்றம் கருதுகிறது. எனவே - இவ்வழக்கு தொடர்ந்து விசாரிப்பது பலனளிக்காது என்ற நிலையை அடைந்துவிட்டதால் (INFRUCTUOUS) இவ்வழக்கு மூடப்படுகிறது... இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட இதர மனுக்களும் மூடப்படுகின்றன."
என தெரிவித்தார்.
|