சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றம் சார்பில், இம்மாதம் 29ஆம் நாளன்று – குடும்பவியல் & குழந்தை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், “வாழ்வியல் வசந்தம்” எனும் தலைப்பில் 29.07.2017. சனிக்கிழமையன்று 10.30 மணி முதல் 13.45 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தம்மாம் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் எம்.ஐ.மெஹர் அலீ முன்னிலை வகித்தார்.
இளவல் முஹம்மத் இத்ரீஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தம்மாம் காயல் நல மன்றச் செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் என்ற தம்மாம் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதோடு, வரவேற்புரையுமாற்றினார்.
பின்னர் “வாழ்வியல் வசந்தம்” உளவியல் வழிகாட்டு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சித் தலைவர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்கங்களையும், பயிற்சி முகாம்களையும் நடத்தி வருபவரும், சென்னை – மாஸ்டர் மைண்ட் கன்சல்ட்ரைனிங் நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர் எம்.ஹுஸைன் பாஷா இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
ஆண் – பெண் உடலியல், உளவியல் தன்மைகளை அறிந்து செயல்படல், மகிழ்ச்சியான திருமண வாழ்வு, கணவன் – மனைவி உறவைப் பலப்படுத்தும் வழிகாட்டல்கள், பெற்றோர் – குழந்தைகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு, குழந்தைகளின் மனோநிலையை சரியான வழியில் கொண்டு செல்லல், பதின்பருவ மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, இஸ்லாமிய சூழலில் தரமான குழந்தைகளை உருவாக்கல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி வழிகாட்டல்களை அவர் வழங்கினார்.
தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் அப்துல் காதிர் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான பெண்களும், ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட படி, அதே நாளில் 15.30 மணி முதல் 18.00 மணி வரை – விருப்பம் தெரிவித்தோருக்கு மட்டும் உளவள கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடத்தப்பட்டது. இதில் 5 பேர் தன்னார்வத்துடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
தகவல் & படம்:
M.M.செய்யித் இஸ்மாஈல் (தம்மாம் இஸ்மாஈல்)
(செயலாளர் – தம்மாம் கா.ந.மன்றம்)
|