காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாக வெற்றிடத்தில் அஞ்சல் நிலையம் அமைய இடம் கேட்டு, நகராட்சிக்கு அஞ்சல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இடம் கேட்டு நகராட்சிக்கு தபால்துறை கடிதம்! மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் பேருந்து நிலைய வளாகத்தில் தபால்நிலையம் அமைவது குறித்து நடப்பது என்ன? குழுமம் மனு!!
தனியார் இடத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காயல்பட்டினம் தபால் நிலையம் இயங்கிவருகிறது. தற்போது புதிய இடத்திற்கு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், பொருத்தமான இடமாக நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தை - தபால்துறை அடையாளம் கண்டுள்ளது.
இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பே கோரிக்கை அனுப்பியும் - அதற்கான பதில் கிடைக்கவில்லை என தபால்நிலையம் அதிகாரிகள் - நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து - பொது மக்கள், அனைத்து ஜமாஅத் - கோவில் - தேவாலயம் நிர்வாகிகளிடம் - நடப்பது என்ன? குழுமம் - ஆதரவு கையெழுத்து பெற்று, ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பேருந்து நிலைய வளாகத்தில் புதிய கட்டிடம், தபால் நிலையத்திற்காக கட்டிட வலியுறுத்தி மனுவினை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக - கடந்த திங்கள்கிழமை - இம்மனு மாவட்ட ஆட்சியரிடம், தூத்துக்குடியில் வழங்கப்பட்டது. தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனு - மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் - வியாழன்று, இம்மனு திருச்செந்தூர் கோட்டாட்சியரிடமும் (RDO) வழங்கப்பட்டது. இப்பிரச்சனை சம்பந்தமாக, கடந்த வாரம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை நடப்பது என்ன? குழுமம் சந்தித்த போது, அவர் - உடனடியாக ஆணையரிடமும், கோட்டாட்சியரிடமும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் - இது சம்பந்தமான மனுவை, கோட்டாட்சியருக்கும் வழங்க சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலரின் (RTO) அனுமதியும் தேவைப்படும் என ஆணையர் தெரிவித்திருந்ததை அடுத்து - இந்த மனு, RTO விடமும் - வியாழனன்று வழங்கப்பட்டது.
இதற்கிடையே, நகராட்சி ஆணையர் கோரியிருந்தப்படி - மீண்டும் இதுசம்பந்தமாக கோரிக்கை மனு, தபால்துறை சார்பாக, நகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை - காயல்பட்டினம் தபால் நிலைய போஸ்ட்மாஸ்டர் திரு பி.வி.சுரேஷ் குமார், நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 26, 2017; 7:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|