SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
பொதுவாக ஆம்னி பேருந்துகளில் – முகவர்கள் மூலமும், ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்து, நீண்ட தொலைவுக்குப் பயணிப்போருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுவது வழமை.
நிகழ்வு நாளன்று, திருச்செந்தூரிலிருந்து புறப்பட்ட - குளிரூட்டப்பட்ட SRM ஆம்னி பேருந்தில் காயலர் மீராத்தம்பி உள்ளிட்ட அனைவரும் சென்னைக்குப் பயணித்திருக்கின்றனர். இருவர் மட்டும்– பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் ஒப்புதல் பெற்று விட்டு திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி வரை மட்டும் பயணிக்க வண்டியில் ஏறியுள்ளனர்.
அவ்விருவரும் மது அருந்தி, தள்ளாடிய நிலையில் வண்டியில் ஏறியதாகத் தெரிகிறது. பேருந்து டி.சி.டபிள்யு. அமிலக் கழிவு தொழிற்சாலை அமைவிடத்தைக் கடந்து சென்றபோது, மது போதையிலிருந்த அவ்விருவரும் வாந்தியெடுக்க, அருகில் பயணித்த காயலர் மீராத்தம்பி மீது அது விழவே, அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வாறிருக்க, தூத்துக்குடியில் குரூஸ் ஃபர்னாந்து சிலையருகில் பேருந்து நிறுத்தப்பட்டதையடுத்து, சிறுநீர் கழிக்க மீராத்தம்பி இறங்கிச் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவ்விருவரும், அவரைக் கத்தியால் பலமுறை குத்தி, குருதி வெள்ளத்தில் விட்டபடி தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
தகவல் கிடைத்த சில மணித்துளிகளில் அவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இக்கொலை காரணமாக, காயல்பட்டினம் இன்றளவும் பரபரப்பான நிலையிலேயே உள்ளது.
சென்னை வரை செல்லும் பயணியரைத் தவிர வேறு யாரையும் ஏற்றும் வழக்கமில்லாத இப்பேருந்தில், அன்று தூத்துக்குடி வரை பயணிக்க இருவரை ஏற்றியதும், அவ்விருவரும் மது போதையிலிருப்பதையறிந்தும் அவர்களுக்கு பேருந்தில் இடமளித்ததும், மது போதை காரணமாக அவர்கள் வாந்தியெடுத்த பின்பும் அவர்களைப் பேருந்திலிருந்து இறக்கி விடாததும் – அப்பேருந்தின் ஓட்டுநர், பொறுப்பாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதைத் திட்டவட்டமாக எண்ணத்தில் கொண்ட ஒருவரே இவ்வாறு பலமுறை கத்தியால் குத்த வாய்ப்புள்ளது என்பதால், இது மது போதையில் செய்யப்பட்டது என்று இல்லாமல், திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் காயல்பட்டினம் பொதுமக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடல் மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்ட பின், 27.08.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 17.30 மணியளவில் அவரது உடல் – காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், ஜமாஅத்துகள் / பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், அனைத்துக் கட்சியினர், சமுதாய அமைப்புகளின் அங்கத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். |