SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிகழ்வு குறித்து முழு அக்கறையுடன் முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த சகோதரர் பி. மீராத்தம்பி, சனியன்று இரவு (ஆகஸ்ட் 26), அடையாளம் தெரியாத இருவரால் - கொலை செய்யப்பட்டுள்ளார். SRM பேருந்தில் - திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை அவர் பயணம் செய்தபோது, இச்சம்பவம், இரவு 11:30 மணியளவில் - பேருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
குடிபோதையில் அந்த கொலையை செய்த இருவரையும் இது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. பொது மக்கள் - அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பேருந்து ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது காயல்பட்டினம் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இக்கொலை சம்பந்தமாகவும், இந்த கொலை வெளிகொண்டு வந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் மூலமான பயணத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் - பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை - நடப்பது என்ன? குழுமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தது - 13 அம்ச கோரிக்கையை வழங்கினர்.
தொடர்ந்து - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மகேந்திரன் IPS அவர்களை, நடப்பது என்ன? குழும அங்கத்தினர் - அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது - வழக்கை விசாரித்துவரும், தூத்துக்குடி மத்திய காவல்நிலைய அதிகாரிகளும் இருந்தனர்.
அவ்வேளையில் - இந்த படுகொலை, மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள அச்சம் குறித்து, கண்காணிப்பாளரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இரண்டு நாட்களாகியும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது குறித்து - பெண்களும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர் என்பதும் கண்காணிப்பாளர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சாதாரண குடிமகனுக்கே இது நிகழ்கிறது என்றால், சமூகத்தில் உள்ள போதை பொருள் போன்ற தீமைகளை தட்டிக்கேட்பவர்களுக்கான பாதுகாப்பு என்ன என்ற கேள்வியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் முன்வைக்கப்பட்டது.
நம் கேள்விகளையும், ஐயப்பாடுகளையும் பொறுமையாக கேட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் - இவ்வழக்கில் உங்களில் ஒருவர் எவ்வளவு அக்கறையுடன் குற்றவாளியை கண்டுப்பிடிக்க ஆர்வமாகவும், அக்கறையுடனும் செயல்புரிவாரோ, அந்த அளவுக்கான அக்கறையுடன் இவ்விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் - கொலையாளி தப்பி ஓடும் படம் CCTV கேமராவில் பதிந்துள்ளதாக தெரிவித்த அவர், ஒரு சில தினங்களில் - கண்டிப்பாக கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்ற உறுதியும் அளித்தார்.
அவரிடம் - ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும்போது உள்ள பாதுகாப்பு இல்லாமை குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. அதற்கான தீர்வுகள் அடங்கிய மனுவும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 28, 2017; 7:15 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|