SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – சரியான துறைகள் மூலமாக வலிமையான கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், சென்னையிலுள்ள – தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஆகியோரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
SRM ஆம்னி பேருந்தில் நடந்த காயலர் கொலை சம்பந்தமாக நேற்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் சென்னையில் மனு!
காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த சகோதரர் பி. மீராத்தம்பி, சனியன்று இரவு (ஆகஸ்ட் 26), அடையாளம் தெரியாத இருவரால் - கொலை செய்யப்பட்டுள்ளார். SRM பேருந்தில் - திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை அவர் பயணம் செய்தபோது, இச்சம்பவம், இரவு 11:30 மணியளவில் நடந்துள்ளது.
குடிபோதையில் அந்த கொலையை செய்த இருவரையும் இது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. பொது மக்கள் - அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பேருந்து ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது காயல்பட்டினம் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இக்கொலை சம்பந்தமாகவும், இந்த கொலை வெளிகொண்டு வந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் மூலமான பயணத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் - பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இது சம்பந்தமாக, நேற்று (ஆகஸ்ட் 29), நடப்பது என்ன? குழுமம் சார்பாக - சென்னையில் உள்ள காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) அலுவலகத்திலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலரிடம் - மனுக்கள் வழங்கப்பட்டன.
தொலைதூரம் பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு உள்ள பாதுகாப்பின்மை குறித்து போக்குவரத்து துறை செயலர் திரு PWC டேவிடார் IAS இடம், விரிவான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நடப்பது என்ன? குழுமத்தின் கோரிக்கைகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சென்னையில் உள்ள காவல்துறையின் மாநில தலைமை நிலையத்தில், காவல்துறைத் தலைமை இயக்குனருக்கான (DGP) மனு, ASSISTANT INSPECTOR GENERAL OF POLICE திரு எஸ்.மஹேஸ்வரன் IPS அவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டது. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற உறுதிமொழியை காவல்துறை உயர் அதிகாரி அப்போது வழங்கினார்.
மாநிலம் முழுவதும் தொலைதூர பேருந்துகளில் செல்வோர் முன்னிலையில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 30, 2017; 8:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|