அரசு பொதுத் தேர்வுகளின்போது மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனி தேர்வறைகளை அமைத்திட தமிழக அரசின் கல்வித்துறைக்கு இக்ராஃ கல்விச் சங்கம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அரசுப் பொதுத்தேர்வு அறைகளை மாணவ - மாணவியருக்கு தனித்தனியாக அமைத்திடுக! பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு இக்ராஃ வேண்டுகோள்!
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கும் – மாணவியருக்கும் பல்லாண்டு காலமாக தனித்தனி தேர்வறைகள் இருந்துவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரே தேர்வறையில் மாணவர்களும், மாணவியரும் இணைந்து தேர்வெழுதும் நிலை நிலவி வருகிறது. குறிப்பாக மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இந்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, இதுவரை அதுபோன்ற சூழலைச் சந்தித்திராத, Co education அல்லாமல் தனித்தனிப் பள்ளிகளில் பயின்று பழகிய காயல்பட்டினம் மாணவ - மாணவியர் தயக்கமின்றித் தேர்வெழுத இயலாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, அவர்களது தேர்ச்சி விகிதம் குறித்தும் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 16-01-2017 அன்று இக்ராஃ அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழக கல்வித்துறை இணை இயக்குனர் திரு பொன்குமார் அவர்களிடம் இக்ராஃ நிர்வாகிகள் இந்த சூழ்நிலை குறித்து எடுத்துரைத்து, இதனை தவிர்க்கும் வகையில் ஏதேனும் ஏற்பாடுகள் செய்திடுவது குறித்தும் ஆலோசித்தனர். ஆனால் 2016-17 ஆண்டுக்கான தேர்வு நடைமுறைகள் முழுமைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் தற்போது சாத்தியமில்லை என்று தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு (2017-18) முயற்சி செய்யுமாறு கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை கடந்த 12-07-2017 அன்று நடைபெற்ற இக்ராஃவின் பொதுக்குழு கூட்டத்திலும் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த 26-08-2017 அன்று இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,
''முஸ்லிம்கள் அதிகளவில் உள்ள காயல்பட்டினத்தில் முஸ்லிம் மாணவியர் கோஷா முறையைப் பேணி வருகின்றனர்.
அரசுப் பொதுத் தேர்வு அறைகளில், மாணவர்களுக்கும் – மாணவியருக்கும் பல்லாண்டு காலமாக தனித்தனி தேர்வறைகள் இருந்துவந்த நிலை மாற்றம் கண்டு, கடந்த சில ஆண்டுகளாக ஒரே தேர்வறையில் மாணவர்களும், மாணவியரும் இணைந்து தேர்வெழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதுவரை அதுபோன்ற சூழலைச் சந்தித்திராத கோஷா அணியும் மாணவியர் தயக்கமின்றித் தேர்வெழுத இயலாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, அவர்களது தேர்ச்சி விகிதம் குறித்தும் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியரும், பெற்றோர்களும் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். எனவே, இனி வரும் காலங்களில் இந்நிலையைப் போக்கி, அரசுப் பொதுத் தேர்வுகளுக்கு, முன்பிருந்த படியே மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனி தேர்வறைகளை ஒதுக்கித் தருமாறு''கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட இந்த கோரிக்கை மனுவின் நகலை பள்ளிக்கல்வித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO), திருச்செந்தூர் தொகுதி.சட்ட மன்ற பேரவை உறுப்பினர் திரு. அனிதா R.ராதா கிருஷ்ணன் M.L.A., மற்றும் மண்ணின் மைந்தரும், கடையநல்லூர் தொகுதி சட்ட மன்ற பேரவை உறுப்பினருமான ஹாஜி K.A.M.முஹம்மது அபூபக்கர் M.L.A ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்
(நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.)
|