SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி, 30.08.2017. புதன்கிழமையன்று சென்னையில், காயல்பட்டினம் .முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், SRM பேருந்து நிறுவன அதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்து கிடைக்கப்பெற்ற தகவலறிக்கை:-
காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர் மீரா தம்பி அவர்கள், கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து , காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள் .
இந்நிலையில், SRM நிறுவன அதிபர் திரு பச்சை முத்து என்ற பாரிவேந்தர் அவர்களை இன்று மாலை பேரவையின் சார்பில் சந்தித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது .
நடைபெற்ற நிகழ்வை அவரிடத்தில் விளக்கமாக எடுத்துக் கூறி மரணமடைந்த சகோதரரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுமாறு பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நமது கோரிக்கையை பரிவோடும், மனிதாபியமான உணர்வோடும், மிகுந்த அக்கறையோடும் கேட்டறிந்த திரு பாரிவேந்தர் அவர்கள் , இத்தகவல் தனக்கு தற்போது தான் தெரிய வந்தது எனத் தெரிவித்ததோடு , உரிய இழப்பீட்டை காலம் சென்ற சகோதரரின் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் வழங்கிடவும் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக நாளை தகவல் தெரிவித்து மீண்டும் சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அபூபக்கர் , சென்னையைச் சார்ந்த முஸ்லீம் லீக் பிரமுகர் ஜனாப் நிஜாமுத்தீன் , பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர் .
மேலும், 31-08-2017 வியாழக்கிழமை காலை பேரவையின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்து அரசின் இழப்பீடு கிடைத்திட கோரிக்கை அளிக்க உள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் நமது நல்ல நோக்கங்களுக்கு வெற்றியை தந்தருள்வானாக!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|