SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – சரியான துறைகள் மூலமாக வலிமையான கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மீராத்தம்பி படுகொலை செய்யப்பட்டு 4 நாட்களாகிவிட்ட பின்பும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அவரது கொலையைத் தொடர்ந்து, அவ்வழக்கை விசாரித்து வரும் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய ஆய்வாளரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவலறிக்கை (FIR) விபரத்தை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த மீராதம்பி, ஆகஸ்ட் 26 சனிக்கிழமையன்று இரவு, SRM பேருந்தில் சென்னைக்கு பயணித்தபோது, குடிபோதையில் இருந்த இருவரால் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை நடந்து நான்கு நாட்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மூன்று படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கொலை தொடர்பான வழக்கு, தூத்துக்குடி மத்திய காவல்நிலையத்தில், FIR எண் 351/2017 என ஆகஸ்ட் 27 அன்று அதிகாலை 2 மணிக்கு பதிவாகியுள்ளது. இதன் தற்போதைய நிலை - விசாரணையில் (UNDER INVESTIGATION) என்ற தகவலே இணையவழி சேவை தெரிவிக்கிறது.
இந்தியா குற்றவியல் சட்டத்தின் (INDIAN PENAL CODE) மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(1) பிரிவு 294 (b) (பொது இடத்தில அசிங்கமாக பேசிய குற்றம்; மூன்று மாதம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்; பெயில் உண்டு )
(2) பிரிவு 302 (கொலை குற்றம்; மரண தண்டனை அல்லது அபராதத்துடன் ஆயுள் தண்டனை; பெயில் கிடையாது)
(3) பிரிவு 506 (2) (கொலை செய்யவோ, அல்லது படுகாயம் ஏற்படுத்தவோ மிரட்டல்; ஏழாண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்; பெயில்
உண்டு.)
அக்காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRஇல் பதிவுசெய்யப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர் V.உத்திரமூர்த்தியின் வாக்குமூலம் விபரம் வருமாறு:
---------------------------
நான் சென்னை கோயம்பேடு, சேமத்தம்மன் நகரில் எனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் சென்னை, கோயம்பேடில் உள்ள SRM பஸ் கம்பெனியில் சுமார் 17 வருடங்களாக டிரைவராக வேலை செய்து வருகிறேன். கோயம்பேடில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸில் டிரைவராக இருந்து வருகிறேன். என்னுடன் மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் S.V.S. நகரைச் சேர்ந்த முரளி என்பவர் செகண்ட் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
26.8.17 ம் தேதி இரவு சுமார் 10.00 PM மணிக்கு TN 19 AD 3493 என்ற SRM பஸ்ஸை திருச்செந்தூரில் இருந்து நான் ஓட்டிவந்தேன். என்னுடன் செகண்ட் டிரைவர் முரளி மற்றும் கிளீனர் டேனியல் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
திருச்செந்தூரில் இருந்து ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த பின்னால் பெயர், விலாசம் தெரிந்து கொண்ட காயல்பட்டிணம், அப்பா பள்ளி தெருவை சேர்ந்த பதுருதீன் மகன் மீராதம்பி என்பவர் 3 ம் நம்பர் சீட்டில் உட்கார்ந்திருந்தார்.
அவருக்கு பின்னால் உள்ள இரண்டு சீட்களும் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக புக்கிங் செய்திருந்தார்கள். அதனால் அந்த சீட்களில் யாரும் இல்லாததால் திருச்செந்தூர் பஸ்டாண்டில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் ஏறி மேற்படி மீராதம்பி உட்கார்ந்திருந்த சீட்டிற்கு பின்னால் உட்கார்ந்து வந்தார்கள்.
பஸ் ஆறுமுகநேரி தாண்டி DCW அருகில் வரும்போது மீராதம்பி பின்னால் இருந்த நபர்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். அது மீராதம்பி காலில் பட்டது. உடனே மீராதம்பி என்னிடம் சொல்லவும் நான் அவர்களை சத்தம் போட்டுவிட்டு பஸ்ஸை DCW பஸ்டாப்பில் நிறுத்தி பஸ்ஸை கழுவி விட்டுவிட்டு அங்கிருந்து சென்னை செல்லும் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு வந்தேன்.
பஸ்ஸில் வரும் போதே மீராதம்பி அவருக்கு பின்னால் இருந்த நபர்களை பார்த்து வாந்தி வந்தா பஸ்ஸிற்கு வெளியே எடுக்க வேண்டியதுதானே உள்ள இருக்கிற ஆட்கள் மேல் வாந்தி எடுக்கிறீர்களே என்று அவர்களை சத்தம் போட்டார்.
26.8.17 ம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு பஸ்ஸை தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து சிலை அருகில் நிறுத்தினேன். தூத்துக்குடி டிக்கெட் எடுத்திருந்த இரண்டு நபர்களும் இறங்கிச் சென்றார்கள்.
நான் சித்ரா லாட்ஜ் அருகிலுள்ள எங்களது கம்பெனிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது இரவு சுமார் 11.15 மணிக்கு மீராதம்பி பஸ்ஸில் இருந்து இறங்கி சித்ரா லாட்ஜின் எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் போது, பஸ்ஸில் அவருக்கு பின்னால் இருந்த இரண்டு நபர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை காட்டியும், ஏல தேவடியா மவனே பஸ்ஸிற்குள் வைத்து எங்களையா சத்தம் போடுற என்று திட்டிக்கொண்டே அவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் மாறி மாறி குத்தினார்.
மீராதம்பி வலியால் அலறி சத்தம் போடவும் நானும், முரளி மற்றும் பஸ்ஸில் இருந்தவர்கள் அவர்களை சத்தம் போட்டுக்கொண்டே பிடிக்க செல்லவும், அவர்கள் யாராவது கிட்ட வந்தால் உங்களையும் குத்தி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டு வடக்கு பார்த்து ஓடிவிட்டார்கள்.
குத்துபட்ட மீராதம்பி ஓடிவந்தவர் பஸ்ஸிற்கு முன்னாள் இரத்த காயங்களுடன் கீழே விழுந்துவிட்டார். உடனே நாங்கள் 108 ஆம்புலன்ஸிற்கு போன் பண்ணி 108 ஆம்புலன்ஸ் வந்ததும் மீராதம்பியை அதில் ஏற்றி அனுப்பி வைத்தோம். பின்னர் நான் தூத்துக்குடி, அரசு மருத்துவமனை சென்றபோது மேற்படி மீராதம்பி இறந்துவிட்டதாக தெரிந்து கொண்டேன்.
இது சம்பந்தமாக நான் எங்களது கம்பெனிக்கு தகவல் சொல்லிவிட்டு, பின்னர் மத்திய காவல் நிலையம் வந்து நடந்த சம்பவத்திற்கு இந்த புகார் மனுவை கொடுக்கிறேன். தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
------------------------
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 30, 2017; 10:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |