காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த சகோதரர் பி. மீராத்தம்பி, சனியன்று இரவு (ஆகஸ்ட் 26), அடையாளம் தெரியாத இருவரால் - கொலை செய்யப்பட்டுள்ளார். SRM பேருந்தில் - திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை அவர் பயணம் செய்தபோது, இச்சம்பவம், இரவு 11:30 மணியளவில் - பேருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
குடிபோதையில் அந்த கொலையை செய்த இருவரையும் இது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. பொது மக்கள் - அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பேருந்து ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது காயல்பட்டினம் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இக்கொலை சம்பந்தமாகவும், இந்த கொலை வெளிகொண்டு வந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் மூலமான பயணத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் - பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
திங்களன்று (ஆகஸ்ட் 28) - நடப்பது என்ன? குழுமத்தினர், தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் நேரடியாக சந்தித்து - 13 அம்ச கோரிக்கையை வழங்கினர். மேலும் - அன்றே, திருச்செந்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், இது சம்பந்தமான மனு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமை செயலகத்தில் - தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும் இது சம்பந்தமான புகார் மனு - நேற்று (ஆகஸ்ட் 28) கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு வழங்கப்பட்ட மனுவினை, மேல்நடவடிக்கைக்காக - போக்குவரத்து ஆணையருக்கு (TRANSPORT COMMISSIONER), அனுப்பவதாக - தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்கள் உறுதியளித்தனர்.
தொடர்ந்து, காவல்துறை, ஆம்னி பேருந்துகள், வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்ற துறைகளை உள்ளடக்கிய உள்துறையின் முதன்மை செயலர் திரு நிரஞ்சன் மார்டி IAS அவர்களிடம் இது சம்பந்தமான புகார் மனு கொடுக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 29, 2017; 9:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|