SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலையைச் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு, படுகொலை நிகழ்வுக்கு வழிகோலியதாகக் கருதப்படும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு, நேற்று (28.08.2017. திங்கட்கிழமை) 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
SDPI தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, கேம்பஸ் ஃப்ரண்ட் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ரூமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இவ்வார்ப்பாட்டத்தில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துக் கைது செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறைவுற்றது.
|