SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் எதிரொலியாக, விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த சகோதரர் பி. மீராத்தம்பி, சனியன்று இரவு (ஆகஸ்ட் 26), அடையாளம் தெரியாத இருவரால் - கொலை செய்யப்பட்டுள்ளார். SRM பேருந்தில் - திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை அவர் பயணம் செய்தபோது, இச்சம்பவம், இரவு 11:30 மணியளவில் - பேருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
குடிபோதையில் அந்த கொலையை செய்த இருவரையும் இது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. பொது மக்கள் - அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பேருந்து ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது காயல்பட்டினம் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இக்கொலை சம்பந்தமாகவும், இந்த கொலை வெளிகொண்டு வந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் மூலமான பயணத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் - பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை - நடப்பது என்ன? குழுமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தது - 13 அம்ச கோரிக்கையை வழங்கினர்.
தொடர்ந்து - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மகேந்திரன் IPS அவர்களை, நடப்பது என்ன? குழும அங்கத்தினர் - அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அதன்பிறகு - நடப்பது என்ன? குழும அங்கத்தினர், திருச்செந்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு - ஆய்வாளர் திருமதி பாத்திமா பர்வீனை சந்தித்து, சனிக்கிழமையன்று நடந்த கொலை சம்பந்தமாக விரிவாக எடுத்து கூறினார்.
மேலும் - ஆம்னி பேருந்துகளின் விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பை அதிகப்படுத்தும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
கொலை நடப்பதற்கு SRM பேருந்தின் அலட்சியப்போக்கும், விதிமீறலும் தான் காரணம் என்றும், அந்நிறுவனம் மீது - உரிமத்தை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 29, 2017; 9:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|