SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – சரியான துறைகள் மூலமாக வலிமையான கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், நடைபெற்ற படுகொலையால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசிடமிருந்தும், பேருந்து நிறுவனத்திடமிருந்தும் சரியான நிவாரணம் கிடைக்க தான் முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு மற்றும் SRM நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுத்தர முயற்சி செய்வேன்: நடப்பது என்ன? குழுமத்திடம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் MLA உறுதி!
காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவை சார்ந்த சகோதரர் பி. மீராத்தம்பி, சனியன்று இரவு (ஆகஸ்ட் 26), அடையாளம் தெரியாத இருவரால் - கொலை செய்யப்பட்டுள்ளார். SRM பேருந்தில் - திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை அவர் பயணம் செய்தபோது, இச்சம்பவம், இரவு 11:30 மணியளவில் நடந்துள்ளது.
குடிபோதையில் அந்த கொலையை செய்த இருவரையும் இது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. பொது மக்கள் - அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பேருந்து ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது காயல்பட்டினம் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இக்கொலை சம்பந்தமாகவும், இந்த கொலை வெளிகொண்டு வந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் மூலமான பயணத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் - பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரியும், ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், SRM நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யக்கோரியும், அரசு மற்றும் பேருந்து நிறுவனம் ஆகியவை உரிய நிவாரணம் வழங்க கோரியும், ஆம்னி பேருந்துகளில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரியும் - தமிழக முதல்வர், உள்துறைசெயலர், காவல்துறை தலைவர், போக்குவரத்துறை செயலர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் - நடப்பது என்ன? குழுமம் மூலமாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் - SRM பேருந்து நிறுவனம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வலியுறுத்தும் நோக்கில், நிவாரணம் வழங்கப்படும் வரை - அந்நிறுவனத்தின் பேருந்துகளுக்கு முன் பதிவு செய்யும் வசதியை நிறுத்திட கோரி, redBus நிறுவனத்திற்கும், SRM நிறுவனத்திற்கும், நாடுதழுவிய அளவில் - change.org வாயிலாக இணையவழி பெட்டிஷன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை பொது மக்களும், அப்பேருந்தை புறக்கணிக்க பிரச்சாரம் முடக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்றிரவு (ஆகஸ்ட் 29) - திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் - நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டல் அமைப்பின் (MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் அவர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு - கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன் IPS அவர்களிடம் தான் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு மூலம் நிவாரணம் பெற்றுத்தரவும், SRM பேருந்து நிறுவனத்திடம் நிவாரணம் பெற்றுத்தரவும் தான் முழு முயற்சி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 30, 2017; 8:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|