SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த சகோதரர் பி. மீராத்தம்பி, சனியன்று இரவு (ஆகஸ்ட் 26), அடையாளம் தெரியாத இருவரால் - கொலை செய்யப்பட்டுள்ளார். SRM பேருந்தில் - திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை அவர் பயணம் செய்தபோது, இச்சம்பவம், இரவு 11:30 மணியளவில் - பேருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
குடிபோதையில் அந்த கொலையை செய்த இருவரையும் இது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. பொதுமக்கள் - அன்றாடம் பயன்படுத்தும் தனியார் பேருந்து ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது காயல்பட்டினம் மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இக்கொலை சம்பந்தமாகவும், இந்த கொலை வெளிகொண்டு வந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் மூலமான பயணத்தில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் - பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
நேற்று காலை நடப்பது என்ன? குழும அங்கத்தினர் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் IAS அவர்களை நேரடியாக சந்தித்து, இது சம்பந்தமான 13 அம்ச கோரிக்கைகளை சமர்ப்பித்தனர் (கோரிக்கைகள் விபரம் தனி செய்தியாக வெளியிடப்படும்). கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட மாவட்ட ஆட்சியர், தான் இது சம்பந்தமாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் விரிவாக பேசியுள்ளதாகவும், இது சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகள் வருமாறு:-
(01) கொலை செய்த இருவரும் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்
(02) தங்கள் கடமையை முறையாகச் செய்யாத SRM Transports பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
(03) ஆம்னி பேருந்துகளுக்கான விதிகளை மீறி பேருந்தை இயக்கிய SRM Transports நிறுவனத்தின் உரிமத்தை ரத்து வேண்டும்
(04) இளம் வயதில் கொல்லப்பட்ட மீராத்தம்பி அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்
(05) உயிர் இழப்புக்குக் காரணமான SRM Transports நிறுவனம், உயிரிழந்த சகோ மீராதம்பி குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்
(06) குடிபோதையில் பேருந்தில் ஏறுபவர்கள் - முன் பதிவு செய்திருந்தாலும் - பயணம் செய்ய தடை செய்யவேண்டும்
(07) எவ்வித கண்காணிப்பும், பாதுகாப்பும் இல்லாத இடைப்பகுதிகளில் பயணியரை ஏற்றுவதை தடை செய்யவேண்டும்
(08) அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானவர்களை பேருந்துகள் ஏற்றுகின்ற. அவர்களால் இடையூறு மட்டும் இல்லாமல், ஆபத்துகளும் உள்ளது. எனவே - இவ்வாறு பயணியர் ஏற்றப்படுவதை தடை செய்யவேண்டும்.
(09) முன்பதிவு செய்பவர்களின் அடையாள விபரங்கள், அடையாள அட்டையை காண்பித்து சரி பார்க்கப்பட்ட பின்பே, பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்
(10) தேநீர், உணவு உட்கொள்ள மற்றும் மலம் - ஜலம் கழிக்க பேருந்துகள் நிற்கும் இடம், தரம் வாய்ந்ததாக, பாதுகாப்பானதாக இல்லை; அரசு விதிகள் - அதிகம் மக்கள் கூடும் இடங்களில், பேருந்து வந்து செல்லும் இடங்களில் CCTV கேமரா பொருத்துவதை கட்டாயப்படுத்தியுள்ளது. ஆனால் - தற்போது, பேருந்துகள் இடையில் நிற்கும் இடங்கள் - எவ்வித பாதுகாப்பும், சுகாதாரமும் இல்லாத இடங்களாக உள்ளன. அவ்வாறான இடங்களில் பேருந்துகளை, இடையில் நிறுத்த தடைவிதிக்க வேண்டும்
(11) பேருந்துகள் இடையில் நிற்கும் இடங்களில் - காவல்துறை கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்
(12) பண்டிகை தினங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தவேண்டும். எதிர்வரும் ஹஜ் பெருநாள் (பக்ரீத்) நாளையொட்டி, பேருந்துகளில் பயணம் செய்வோர் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே - இந்த காலகட்டத்தில், ஆம்னி பேருந்துகள், விதிமுறைகளை மீறாமல் செயல்புரிய - உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
(13) பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் விதிமுறைகளை மீறினால் - காவல்துறைக்கு புகார் தெரிவிக்க - உதவி தொலைபேசி எண் அறிமுகம் செய்து, அதனை பேருந்துகளிலும், ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 28, 2017; 5:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|