SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாதிருக்கத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் - நகரின் பொதுநல அமைப்புகள், சமுதாய அரசியல் கட்சிகள் பல்வேறு கோணங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் – கொலையாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், தமிழக முதல்வரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், உரிய இழப்பீட்டை வழங்க – உயிரிழந்த மீராத்தம்பி பயணித்த SRM தனியார் ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளரைச் சந்தித்து வலியுறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (29.08.2017.) வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் முக்கியத் தகவல்
அஸ்ஸலாமு அலைக்கும்
-----------------------------------------------------
முதலமைச்சரை சந்தித்து முறையீடு
காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர் மீரா தம்பி என்பவர் கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பேரவை சில நடவடிக்கைகளை மேற்கொண்டதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம் .
இந்நிலையில், இது சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அல்ஹாஜ் அபூபக்கர் அவர்களிடம் பேரவையின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை, தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து ஏற்கப்பட்டு தீர்மானம் வடிவமாகியது.
இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் , மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜ் அவர்களிடம் வைத்த முறையீட்டைத் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பேரவையின் சார்பில் சந்தித்து நமது கோரிக்கைகளை வலியுறுத்த 31-08-2017 வியாழன்கிழமை அனுமதி கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இச்சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அபூபக்கர் , பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் ஆகியோர் பங்கேற்பர் .
SRM உரிமையாளருடன் சந்திப்பு
மேலும் , SRM நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களை, பேரவையின் சார்பில் 30-08-2017 புதன்கிழமை சந்தித்து, படுகொலை செய்யப்பட்ட சகோதரரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்க உள்ளோம் .
இச்சந்திப்பில் , சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அபூபக்கர் , அல்ஹாஜ் காயல் இளவரசு , பேரவையின் துணைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் ஆகியோர் பங்கேற்பர் .
இவண்,
நிர்வாகிகள், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை
29-08-2017
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|