காயல்பட்டினம் நகராட்சியில் பல்வேறு முறையீடுகளுக்குப் பின்பும், இதுநாள் வரை நிறைவேற்றப்படாத நிலுவைப் பணிகள் குறித்த - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு, நகராட்சி நிர்வாக ஆணையரக (CMA Office) இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் அடிப்படையான, அத்தியாவசியமான பணிகள் குறித்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - கடந்த பல மாதங்களாக, பல்வேறு கோரிக்கைகள், நகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது. அவற்றில் ஒரு சில கோரிக்கைகள் தவிர, பெருவாரியான கோரிக்கைகள் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இது சம்பந்தமாக நினைவூட்டல் மனு வழங்கப்பட்ட பின்பும், நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து - தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துரையின் முதன்மை செயலர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு - மனு வழங்கப்பட்டது.
முதல்வரின் தனிப்பிரிவிற்கு வழங்கப்பட்ட மனு - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்திற்கு கடந்த மாதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது - அம்மனு மீது நடவடிக்கை எடுத்து, எடுக்கபப்ட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வரின் தனிப்பிரிவிற்கும், நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளருக்கும் பதில் வழங்க உத்தரவிட்டு, நகராட்சி நிர்வாகத்திறன் இணை இயக்குனர் - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மனுவில் இடம்பெற்றிருந்த நிலுவையில் உள்ள பணிகளில் முக்கியமானவை:-
(1) காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் CCTV கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு தருணங்களில் மனு
(2) ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 2012ஆம் ஆண்டு வாங்கப்பட்டு - பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாத 48 புஷ் கார்ட் (தள்ளு வண்டி) குப்பை சேகரிப்பு குறித்த மனு
(3) காயல்பட்டினம் நகராட்சியில் பணி புரிவதாகக் கூறப்படும் 30 நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 50 ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியாளர்கள் விபரம் - அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் விபரத்தையும் சேர்த்து வெளியிடக்கோரும் மனு
(4) நகரில் குடிநீர் வழங்கப்படும் பகுதி மற்றும் நேரம் ஆகியவற்றை முற்கூட்டியே அறிவிக்கும் கால அட்டவணை வெளியிடக் கோரியும், புதிதாக அமல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் குடிநீர் திட்டத்தைப் பாதுகாக்க, திரு. பாஸ்கரன் மற்றும் திரு. நிஜார் ஆகியோரை காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து பணியிட மாற்றம் செய்யக் கோரி வழங்கப்பட்ட மனு
(5) பேருந்துகள் பயன்படுத்தும் பெரிய நெசவு தெரு மற்றும் எல்.கே.லெப்பை தம்பி சாலையைப் புனரமைக்கக் கோரி பல்வேறு தருணங்களில் வழங்கப்பட்ட மனு
(6) பேருந்து நிலையத்தில் - உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் - இரு வாயில்களும் பயன்படுத்தப்படுவதால் உள்ள ஆபத்து குறித்த மனு
(7) நகரின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தெரு நாய்கள் தொல்லைகள் குறித்து DOG SHELTER அமைப்பது உட்பட பிற நடவடிக்கைகளை எடுக்கக் கோரி வழங்கப்பட்ட மனு
(8) பல லட்ச ரூபாய் செலவில் - காயல்பட்டினம் கடற்கரை மற்றும் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாத கழிவறைகள் குறித்த மனு
(9) நகராட்சி நிதி நிலைமை, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் (PUBLIC DISCLOSURE) என்ற அரசு விதிமுறையை மீறி, வெளிப்படைத் தன்மையின்றி நகராட்சி செயல்புரிந்து வருவது குறித்த மனு
(10) கடற்கரை கடைகளில் இருந்து கட்டணம் வசூல் செய்யும் உரிமம், வாகனங்களை நிறுத்தம் செய்ய உரிமம் பெற்றுள்ளவர்கள் - கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், வாகனங்களை முறையாக நிறுத்த பொறுப்பு எடுக்கவேண்டும் என்ற விதிமுறைகளை இணைக்கக் கோரி வழங்கப்பட்ட மனு
(11) நகராட்சி தரப்பின் அலட்சியம் காரணமாக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 43 சாலைகள், கொம்புத்துறை பகுதி குப்பைக் கிடங்கு, ஒப்பந்தப் பணியாளர் செந்தில் குமார், ஆக்கிரமிப்புகள் சம்பந்தமான வழக்குகளை துரிதமாக முடித்திடக் கோரிய மனு
(12) குடிநீரை சுத்திகரிக்க வேண்டும் எனக் கூறி நகராட்சி மூலம் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட CHLORINATOR அமைக்கும் டெண்டரில் உள்ள குறைபாடுகள் குறித்த மனு
(13) அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ள குடித்தனங்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை ரத்து செய்யக் கோரி வழங்கப்பட்ட மனு
(14) நகரின் பல்வேறு பகுதிகளில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தொடர்ந்து ஏற்படும் கசிவு & உடைப்புகளால் உண்டாகும் குடிநீர் வீண்விரயம் மற்றும் சுகாதாரக் கேடு குறித்த மனு
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 22, 2017; 11:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|