காயல்பட்டினத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் திருமணம், மாநாடுகள், கந்தூரி நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாகள் என – விருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் நிறைவில், எஞ்சும் உணவுப் பொருட்களையும், நன்மையை நாடி அளிக்க விரும்புவோரின் உணவு / பயன்படுத்தப்பட்ட நல்ல உடைகளையும் பெற்று, தேவையுடையோருக்கு வினியோகிப்பதற்காக, “அல்அன்ஸார்” எனும் பெயரில் சிறப்பு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
இதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், 21.08.2017. திங்கட்கிழமையன்று 19.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகத்தில், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) காயல்பட்டினத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் திருமணம், மாநாடுகள், கந்தூரி நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாகள் என – விருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் நிறைவில், எஞ்சும் உணவுப் பொருட்களையும், நன்மையை நாடி அளிக்க விரும்புவோரின் உணவு / பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளையும் பெற்று, தேவையுடையோருக்கு வினியோகிப்பதற்காக சிறப்பு அமைப்பை “அல்அன்ஸார்” எனும் பெயரில் துவக்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(2) தேவையுடையோருக்கு உணவு, உடை ஆகியவற்றை மட்டும் பெற்று வினியோகிக்கும் ஒரேயொரு செயல்திட்டத்தை மட்டும் கொண்டதாக “அல்அன்ஸார்” அமைப்பை இயக்கிடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(3) உணவு எனில்,
(அ) தருவோரிடமிருந்து உணவைப் பெறல், (ஆ) முறையாக அவற்றைப் பைகளிலிட்டு வினியோகத்திற்கு ஆயத்தம் செய்தல், (இ) ஆயத்தம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை – தேவையுடையோருக்கு முறைப்படி கொண்டு சேர்த்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியும்,
உடை எனில்,
(அ) பயன்படுத்தப்பட்ட – நல்ல நிலையிலிருக்கும் ஆடைகளைச் சலவை செய்து, இஸ்திரி போட்டு, பைகளிலிட்டு வழங்கப்படும் உடைகளை கொடையாளர்களிடமிருந்து பெறல், (ஆ) பெற்ற உடைகளை ஆண் / பெண் / சிறுவன் / சிறுமி / குழந்தை – என வயது வாரியாக வகைப்படுத்தி வைத்தல், (இ) வகைப்படுத்தப்பட்ட உடைகளை – தேவையுடையோருக்கு முறைப்படி கொண்டு சேர்த்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியும்
“அல்அன்ஸார்” அமைப்பை செயல்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(4) “அல்அன்ஸார் அமைப்பிற்கு, பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
துணைத்தலைவர்:
எஸ்.ஏ.கே.அபூபக்கர் ஸித்தீக் (எ) ஸ்கட் அபூ
செயலாளர்:
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
துணைச் செயலாளர்:
ஹாஃபிழ் ஏ.டபிள்யு.அப்துல் காதிர் அல்புகாரீ
பொருளாளர்:
ஹாஃபிழ் எம்.ஐ.மஹ்மூத் சுல்தான்
செயற்குழு உறுப்பினர்கள்:
(1) மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ
(2) எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர்
(3) எஸ்.கே.ஸாலிஹ்
(4) எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி
(5) எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம்
(6) அப்துல் ஃபத்தாஹ்
(7) எஸ்.ஷம்சுத்தீன் ஸஃப்ரீன்
(8) ஏ.எஸ்.முஹம்மத் ஜைனுத்தீன்
இத்திட்டத்தில் மிகுந்த ஆர்வமும் – அக்கறையும் – செயலாற்றலும் கொண்டுள்ள – நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களை அந்தந்தப் பகுதி ஒருங்கிணைப்பாளர்களாகவும் கொண்டு, “அல்அன்ஸார்” அமைப்பை இயக்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(5) உணவு / உடை வழங்குவதற்காக “அல்அன்ஸார்” அமைப்பை பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, எளிதில் நினைவில் நிற்கும் எண்களைக் கொண்ட (Fancy Numbers) தொடர்பு கைபேசி எண்களைப் பெற்று, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், திருமணம் உள்ளிட்ட விருந்து வைபவங்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் இலகுவாகப் பார்க்கும் அளவில் – “அல்அன்ஸார்” செயல்திட்டத்தையும், தொடர்பு எண்களையும் விளம்பரப்படுத்தவும், பொதுமக்களுக்கு “அல்அன்ஸார்” குறித்த விளக்கப் பிரசுரத்தை வினியோகிக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
‘கரு’ S.A.செய்யித் இப்றாஹீம்
|