நடப்பாண்டு விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளைக் கரைத்திட வரைமுறைகளை நிர்ணயித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
இரசாயண வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு, நீர் நிலைகளில் கரைக்கும் வழமை உள்ளது. ஆனால், அண்மைக் காலமாக இரசாயண வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை, வழிபட்ட பின்னர் நீர் நிலைகளில் கரைப்பதால், அவை மாசுபடுகின்றன. எனவே, பொதுமக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது:-
தூத்துக்குடி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும், இயற்கை சாயம் கொண்டதுமான விநாயகர் சிலைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். செயற்கை வர்ணப் பூச்சும், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளுக்கு அனுமதியில்லை. எனவே, அதுபோன்ற சிலைகள் நிறுவப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால், முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், வேம்பார் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. மேற்படி அனுமதி வழங்கப்பட்ட இடம் தவிர்த்து புதிதாக எந்தவோர் இடத்திலும் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதியில்லை.
மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்போது, சாலைகளின் அருகிலும் – குறுக்கிலும் செல்லும் மின் கம்பிவடங்களில் மோதாத வகையில் அச்சிலைகளின் உயரங்களை அமைத்திட அந்தந்தப் பகுதி விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
1. களிமண்ணால் செய்யப்பட்டதும் / சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம்.
2. நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இ;யற்கை வா;ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். இரசாயன வா;ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளையும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப் பொருளால் செய்யப்பட்ட சிலைகளையும் நீர் நிலைகளில் கரைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவா;கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
3. கடலோரத்தில் விநாயகர் சிலைகளை கரைக்காமல் கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று மேற்கண்ட ஐந்து இடங்களில் மட்டுமே கரைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது தொடர்பாகவும், நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், மாவட்ட காவல்துறையின் சார்பிலும் அவ்வவ்போது விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு நல்கி விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழா அமைதியான முறையிலும், சிறப்பாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|