உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டதுடன், நடப்பாண்டில் 29 மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியர் 30 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.45 மணி முதல் 08:30 மணி வரை காயல்பட்டினம், கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்ராஃவின் தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளருமான ஹாஜி எம்.எம்.மகுதூம் முஹம்மது, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோரடங்கிய குழுவினர், நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியரை தனித்தனியாக நேர்காணல் செய்தனர். இவர்களுக்கு உதவியாக இக்ராஃ செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது,பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நேர்காணலில், 13 மாணவர்கள், 16 மாணவியர் என 29 பேர் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். (விண்ணப்பித்திருந்த மாணவிகளில் ஒருவர் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை). இதில் மாணவர்கள் B.Com, B.Com & CPT (CA), B.B.A., B.Sc.(CS), B.Sc.(Maths), B.Sc.(Medical Imaging Technology - MIT), B.Sc. - AHS (Respiratory), B.Sc. (Vis-Com) ஆகிய கல்வியும், மாணவியர் B.A.(Eng.), B.Com., B.B.A., B.C.A., B.Sc.(Maths), B.Sc.(CS), B.Sc.(Psychology) ஆகிய கல்வியும் பயில்கின்றனர். இவர்களுக்கான கல்வி நிதியாக மாணவர்களுக்கு ரூபாய் 3,25,000 மற்றும் மாணவியருக்கு ரூபாய் 1,16,000 என மொத்தம் ரூபாய் 4,41,000/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மாணவர்களுக்கும் (சென்ற வருடம் இக்ராஃ வின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானித்தபடி) வட்டியில்லா கல்விக்கடன் அடிப்படையில் வழங்கப்பட்டது. இவர்களில் 6 மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான முழு கல்வித் தொகையும் அளிக்கப்பட்டுள்ளது. இதர மாணவர்களுக்கு அவர்களின் தேவைகளில் 75 மற்றும் 50 சதவிகிதம் அளவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1162 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு மாணவிக்கு தேவையான முழு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டது. இதர மாணவிகளுக்கும் வழமை போல் கல்வி நிதி உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. (தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் இவர்களுக்கான கல்வி நிதி வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!).
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் ஆதித்தனார் கல்லூரி (திருச்செந்தூர்), சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (பாளையங்கோட்டை), புதுக்கல்லூரி (சென்னை), பெரியார் ஈ .வெ..ரா .கல்லூரி (திருச்சி), சவீதா மருத்துவக்கல்லூரி (சென்னை), SRM பல்கலைக்கழகம் (சென்னை), M.E.S.கல்லூரி (கேரளா), KISHIN CHAND CHELLARAM COLLEGE மற்றும் THE INSTITUTE OF CHARTERED ACCOUNTANT OF INDIA (மும்பை) ஆகிய கல்லூரிகளிலும், மாணவிகள் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி, நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி (கீழக்கரை) ஆகிய கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர்களில் சிலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதும், இந்த மாணவ - மாணவியருக்கு தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த நேர்காணலில் கலந்து கொண்ட மாணவ - மாணவியரிடம், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றிய விபரங்களை தெரிவித்து கட்டாயம் அதற்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நேர்காணலில் 29 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 4,41,000/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், நடப்பாண்டு (2017 - 18) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 3,02,000/- மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.இதனை பூர்த்தி செய்ய மேலும் ரூபாய் 1,39,000/- தேவைப்படுகிறது. இதில் அனுசரணை வழங்காத காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் இந்த மாணவ - மாணவியரின் ஒளிமயமான வாழ்விற்கு உதவிடும் வகையில் அணுசரணை (sponsorship) வழங்கி ஆதரிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
A.தர்வேஷ் முஹம்மத்
நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
|