வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு நடத்தப்படும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், 12.08.2017. சனிக்கிழமையன்று 20.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள – கட்சியின் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நடைபெற்றது.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். 06ஆவது வார்டு செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர தலைவரும், கூட்டத் தலைவருமான எம்.ஏ.முஹம்மத் ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், கட்சியின் அபிமானி எஸ்.ஏ.ஜவாஹிர் உள்ளிட்ட - பங்கேற்றோர் கருத்துரைகளைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக இவர்கள் திட்டமிட்டு அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதைக் கண்டித்ததோடு, இத்தருணத்தில் சிறுபான்மையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமென்றும், அதற்காக – முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்குத் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும், துவக்கமாக வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் “சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு” நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பின்னர், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – அக். 14இல் சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூ-டி மாவட்ட மாநாடு:
மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகளையும், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளையும் கண்டித்தும், சிறுபான்மையினருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாள் சனிக்கிழமையன்று, “சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு” நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – அரபிக் கல்லூரிகளில் பட்டம் பெறும் ஆலிம், ஹாஃபிழ்களுக்கும், நகர சாதனையாளர்களுக்கும் பாராட்டு நிகழ்ச்சிகள்:
காயல்பட்டினத்திலும், வெளியூர்களிலுமுள்ள அரபிக் கல்லூரிகளில் பயின்று - மவ்லவீ ஆலிம்களாகவும், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ்களாகவும் பட்டம் பெறும் மாணவர்களையும், குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்யும் காயலர்களையும் பாராட்டும் வகையில், அவ்வப்போது பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்திடுவதென்றும், அதன் துவக்கமாக – 14.08.2017. அன்று காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் ‘மவ்லவீ ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறவுள்ள காயலர்களை வரவழைத்து, கட்சியின் சார்பில் விரைவில் பாராட்டு நிகழ்ச்சியை நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரை, துஆ, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
அக்கூட்டத்தைத் தொடர்ந்து, 17.08.2017. வியாழக்கிழமையன்று 20.00 மணியளவில், கட்சி அலுவலகத்தில் – “சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு” ஏற்பாடுகள் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையிலும், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடுவதற்காக ஏற்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வழிகாட்டலில், பின்வருமாறு ஏற்பாட்டுக் குழுக்களை அமைத்து தீர்மானிக்கப்பட்டது.
நிதிக் குழு:
(1) எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
(2) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
(3) வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(4) ‘பெத்தப்பா’ சுல்தான்
(5) ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன்
விளம்பரக் குழு:
(1) ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்
(2) மன்னர் பாதுல் அஸ்ஹப்
(3) எம்.எச்.அப்துல் வாஹித்
(4) எம்.இசட்.சித்தீக்
(5) ஏ.கே.மஹ்மூத் சுலைமான்
கொடி & தோரண ஏற்பாட்டுக் குழு:
(1) கே.எம்.என்.உமர் அப்துல் காதிர்
(2) ‘எலக்ட்ரீஷியன்’ பஷீர்
(3) கே.வி.ஜிஃப்ரீ
(4) பத்ருத்தீன்
(5) கே.எம்.டீ.சித்தீக்
செய்தி & மக்கள் தொடர்புக் குழு:
(1) எஸ்.கே.ஸாலிஹ்
(2) என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ
(3) ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்
மஹல்லா ஜமாஅத் சந்திப்புக் குழு:
(1) எம்.எல்.ஷேக்னா லெப்பை
(2) என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன்
(3) அரபி ஷாஹுல் ஹமீத்
(4) எம்.கே.முஹம்மத் அலீ (எ) ஹாஜி காக்கா
(5) ஏ.ஆர்.தாஹா
(6) ஷேக் அப்துல் காதிர்
மாநாட்டிற்கு முன்பாக, கட்சியின் பதிவு செய்யப்பட்ட நான்கு அணிகளுக்கும் முறைப்படி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக பின்வருமாறு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன:-
மாணவரணி அமைப்புக் குழு:
(1) எம்.கே.முஹம்மத் அலீ (எ) ஹாஜி காக்கா
(2) அப்துல் ரஸ்ஸாக்
(3) கே.வி.ஜிஃப்ரீ
இளைஞரணி அமைப்புக் குழு:
(1) கே.எம்.என்.உமர் அப்துல் காதிர்
(2) இப்றாஹீம் அத்ஹம்
(3) எம்.எல்.ஷேக்னா லெப்பை
மகளிரணி அமைப்புக் குழு:
(1) எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
(2) ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்
(3) கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
சுதந்திர தொழிலாளர் யூனியன் அமைப்புக் குழு:
(1) மன்னர் பாதுல் அஸ்ஹப்
(2) ‘எலக்ட்ரீஷியன்’ பஷீர்
(3) ரஹ்மத்துல்லாஹ்
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, கட்சியின் நகர மூத்த தலைவர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் - கட்சியின் நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|