வரும் செப்டம்பர் மாதம் 01ஆம் நாளன்று, ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது “இக்ராஃ நாள்” கடைப்பிடிக்கப்படும் என, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 08.08.2017. அன்று 20.00 மணி முதல் 21.15 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் வரவேற்புரையாற்றினார். அனைவருக்கும் சிங்கப்பூர் தேசிய நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், மன்றக் கூட்டங்களில் அனைவரும் இணைந்து கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தோதுவாக, இயன்றளவுக்கு குறித்த நேரத்தில் கூட்டங்களுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டார்.
மன்றத்தின் நகர்நலத் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்கள், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டன.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அறிக்கை சமர்ப்பித்தார். அதை நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஸிக் முன்மொழிய, எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ வழிமொழிதலுடன் கூட்டம் அங்கீகரித்தது.
இக்ராஃ, ஷிஃபா, துளிர் குறித்த விளக்கம்:
காயல்பட்டினத்தில் இக்ராஃ, ஷிஃபா, துளிர் குறித்த தகவல்களை, மன்றச் செயலாளர் கூட்டத்தில் பகிர்ந்தார். அண்மையில் இக்ராஃவில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டவை, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டம் நடப்பாண்டு முதல் துவக்கப்பட்டு, 29 மாணவர்களது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டமை, மொத்தம் 4,41,000 ரூபாயில், 3,25,000 ரூபாய் தொகை – மாணவர்களுக்கான கல்விக் கடனாகவும், எஞ்சிய தொகை – மாணவியருக்கான கல்வி உதவித்தொகையாகவும் வழங்கப்பட்ட விபரங்களைக் கூறி, வருங்காலங்களில், இத்திட்டம் இக்ராஃவின் நிதியாதாரத்தை உறுதிப்படுத்தி, நல்ல பலனைத் தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஷிஃபாவுக்கான மன்றத் தூதுவராக மன்றத் தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் வசம் அப்பொறுப்பு அளிக்கப்பட்டது. இதுவரை அப்பொறுப்பில் இயங்கி வந்த எம்.ஆர்.ரஷீத் ஜமான் உடைய சேவைகளுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
துளிர் பள்ளிக்கு வகுப்பறை கட்டுவதற்காக, 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் தொகை, அதன் அலுவலகப் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அனுசரணையளித்த மன்ற அங்கத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், இதுநாள் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையைச் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு இசைவளித்தது. அடுத்த காலாண்டிற்கான மன்ற உறுப்பினர்களின் சந்தாக்களைக் குறித்த காலத்தில் வழங்கி ஒத்துழைக்குமாறு அவர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
நிதியொதுக்கீடு:
இக்கூட்டத்தில், பின்வருமாறு நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டது:-
2016-2017 கல்வியாண்டில் இக்ராஃ மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் வகைக்காக 2,25,000
இக்ராஃ வருடாந்திர (2017) நிர்வாகச் செலவினங்களுக்காக 25,000
ஷிஃபா அறக்கட்டளை வருடாந்திர (2017) நிர்வாகச் செலவினங்களுக்காக 25,000
ஷிஃபா மூலம் 3ஆவது காலாண்டுக்கான மருத்துவ உதவித்தொகை வழங்கல் வகைக்காக 1,00,000
முதியோர் நல உதவித் திட்டத்திற்காக 27,000
முதியோர் நலத்திட்டம்:
உறுப்பினர் எம்.எம்.அப்துல் காதிர் ஒருங்கிணைப்பில் இயங்கி வரும் - மன்றத்தின் முதியோர் நலத்திட்டத்தின் கீழ், வரும் அக்டோபர் 2017 முதல், அடுத்த ஓராண்டுக்கான பயனாளிகளை முன்மொழியக் கோரி, மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியே தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை எந்தப் பயனாளியையும் முன்மொழியாத உறுப்பினர்கள் தரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியல், அடுத்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, இறுதிகட்ட விசாரணைக்காக மன்றத்தின் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு தலா மாதம் 1,500 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் குறித்து பெறப்பட்ட பின்னூட்டங்கள் கூட்டத்தில் பகிரப்பட்டன. வரும் ஹஜ் பெருநாளையொட்டி 100 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்படும் என்றும், இத்திட்டம் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா தலைமையில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு, சேகரமாகும் தொகை மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்படும் என்றும், அனைத்துறுப்பினர்களும் தமது உண்டியல்களைச் சிறிதும் வெற்றிடம் இல்லாமல் அடுத்த கூட்டத்தின்போது கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பெருநாள் ஒன்றுகூடல்:
வரும் செப்டம்பர் 01ஆம் நாள் – ஹஜ் பெருநாளன்று பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்திடவும், பொருத்தமான நிகழ்விடம் விரைவில் இறுதி செய்யப்பட்டு, அனைவருக்கும் மின்னஞ்சல் வழியே தகவல் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ நாள்:
ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலின்போது, “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, இக்ராஃ கல்வி உதவித்தொகை வகைக்காக நிதி திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், நன்றியுரையைத் தொடர்ந்து, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|