காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் அஞ்சல் நிலையத்தை அமைக்க வாய்ப்புள்ள இடங்களை, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீதிடம் “நடப்பது என்ன?” குழுமம் நேரில் காண்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ம.ஜ.க.வின் மாநில பொருளாளரிடம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள காலியிடங்கள் காண்பிக்கப்பட்டன! துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறுவதாக உறுதி!! தமீமுன் அன்சாரி MLA உடன் இன்று மீண்டும் சந்திப்பு!!!
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடம் ஒன்றில் - தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை வாடகை அடிப்படையில் வழங்கிட நகராட்சியிடம் தபால்துறை கேட்டுள்ளது. இதனை வலியுறுத்தி - பொதுமக்கள், ஜமாத்துக்கள், கோவில்-தேவாலயங்களின் நிர்வாகிகள் ஆகியோரிடம் பெறப்பட்ட ஆதரவு கையெழுத்துக்கள் அடங்கிய மனு - நகராட்சி ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் MLA, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் கே.ஏ.எம்.அபூபக்கர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் தமீமுன் அன்சாரி MLA ஆகியோரிடம் இது சம்பந்தமான மனு சமீபத்தில் வழங்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA வை - நடப்பது என்ன? குழுமம் சார்பாக சென்னையில் நேரில் சந்தித்து - ஆகஸ்ட் 16 அன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனு குறித்து - நேரில் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பின்போது - அக்கட்சியின் மாநில செயலாளர் ஜனாப் என்.ஏ.தைமிய்யா உடனிருந்தார். இது சம்பந்தமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியை விரைவில் நேரடியாக சந்தித்து பேசுவதாக தமீமுன் அன்சாரி MLA உறுதியளித்தார்.
மேலும் - கட்சி பணி நிமித்தமாக இன்று காயல்பட்டினம் வந்திருந்த - ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் ஜனாப் ஹாரூன் ரஷீத் அவர்களை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் சந்தித்து பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடங்களை நேரடியாக காண்பித்தனர்.
தபால் நிலையத்தினை அமைத்திட குறைந்தது 5 இடங்கள் உள்ளன என்பது அவரிடம் விளக்கப்பட்டது. இடங்களை பார்வையிட்ட ம.ஜ.க.வின் மாநில பொருளாளர் - இது சம்பந்தமாக துறை அமைச்சரிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 20, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|