காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெற்றிடத்தில் அஞ்சல் நிலையத்தை அமைக்க வலியுறுத்தக் கோரி, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா, கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தமீமுன் அன்ஸாரீ ஆகியோரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அனிதா ராதாகிருஷ்ணன் MLA, அபூபக்கர் MLA மற்றும் தமீமுன் அன்சாரி MLA ஆகியோரிடம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடத்தில் தபால் நிலையம் அமைத்திட நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டுகோள்!
காயல்பட்டினம் பிரதான வீதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தபால் நிலையம் இயங்கிவருகிறது. தபால் நிலையத்திற்கு புதிய இடம் தேடிவரும் சூழலில் - பொருத்தமான மாற்றுயிடம் பேருந்து நிலையத்தில் உள்ள காலியிடம் என தபால்துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அவ்விடத்தில் நகராட்சி மூலம் கட்டிடம் கட்டிட முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டுவருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள், அனைத்து ஜமாத்துக்கள், கோவில்-தேவாலயம் நிர்வாகங்கள் ஆகியோரிடம் ஆதரவு கையெழுத்து கடந்த சில நாட்களாக நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில் பெறப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மனு - ஆகஸ்ட் 16 அன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் ஆகியோரிடம் நேரில் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு வழங்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது; மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் (CMA) நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.
இம்முயற்சிகள் தொடர்ச்சியாக - இக்கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தக்கோரி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் MLA, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.எம்.எம்.அபூபக்கர் MLA மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமீமுன் அன்சாரி MLA ஆகியோரிடமும் இம்மனுக்கள் நேரடியாக வழங்கப்பட்டது.
====================================================
(1) இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொது செயலாளரும், கடையநல்லூர் சட்ட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.எம். அபூபக்கர் MLA
====================================================
கடந்த வாரம், ஆகஸ்ட் 13 அன்று, நடப்பது என்ன? குழும அங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு - காயல்பட்டினத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொது செயலாளரும், கடையநல்லூர் சட்ட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.எம்.அபூபக்கர் MLA அவர்களை நேரடியாக சந்தித்து - தபால் நிலையம் சம்பந்தமான கோரிக்கை மனு வழங்கியது.
மேலும் - நகரில் தலைவிரித்தாடும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும், சட்டமன்றத்தில் இது குறித்து பேசவும் - அவரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
====================================================
(2) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA
====================================================
ஆகஸ்ட் 16 அன்று சென்னையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் - அக்கட்சியின் பொது செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA அவர்களிடம் தபால் நிலையம் சம்பந்தமான கோரிக்கை மனு வழங்கப்பட்டது
====================================================
(3) திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் MLA
====================================================
ஆகஸ்ட் 19 அன்று திருச்செந்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்களிடம் தபால் நிலையம் சம்பந்தமான கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடமும், திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு - இது நகரின் ஒட்டுமொத்த கோரிக்கை என வலியுறுத்தி - தபால் நிலையம் புதிய இடத்தில அமைந்திட ஆவன செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 19, 2017; 2:15 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|