அதிராம்பட்டினத்திலிருந்து காயல்பட்டினம் வந்த பயணியரை, நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்தில் சென்று இறக்குவதை விட்டுவிட்டு, ஆறுமுகநேரியில் இறங்கச் சொன்ன பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்துக்கொள்ள காயல் ஸ்போர்ட்டிங் கிளப் இளைஞர்கள் சென்றிருந்தார்கள். அந்த போட்டிகளில் வெற்றிபெற்ற அவர்கள், ஜூலை 7 இரவு - 305 J என்ற தடம் எண் கொண்ட, கும்பக்கோணம் கழகம், நாகப்பட்டினம் மண்டலம் பேருந்தில் - காயல்பட்டினம் திரும்ப ஏறினார்கள்.
இப்பேருந்து காயல்பட்டினம் செல்லாது என்றும், ஆறுமுகனேரியில் இறங்க அப்பேருந்து நடத்துனர் கூறவே, அவ்விளைஞர்கள் திருச்செந்தூர் வரை டிக்கெட் எடுத்து - வேறு பேருந்து மூலமாக காயல்பட்டினம் வந்தடைந்தார்கள். அதே - வண்டியில், திருத்துறைப்பூண்டியில் இருந்து காயல்பட்டினம் வந்த குடும்பத்தினருக்கும் இதே நிலை ஏற்பட்டது.
இது சம்பந்தமாக, அவ்விளைஞர்கள் சார்பாகவும், திருத்துறைப்பூண்டி குடும்பத்தினர் சார்பாகவும், இரு தினங்கள் கழித்து புதுக்கோட்டையில் இருந்து ஏறிய இதே பிரச்னையை சந்தித்த பயணியர் சார்பாகவும் பெறப்பட்ட புகார் மனுக்கள் - நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் - அரசு போக்குவரத்து கழகம் (கும்பக்கோணம்) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம் நேரடியாக - ஜூலை 10 அன்று வழங்கப்பட்டது.
தற்போது - அதிராம்பட்டினத்தில் ஏறிய பயணியர் சார்பாக புகார் பதிவு செய்திருந்த சகோதரர் ஹமீத் அர்ஷத்க்கு போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள பதிலில் - அப்பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் - நடப்பது என்ன? குழுமத்திற்கு தனியாக பதில் வழங்கியுள்ள அப்பேருந்தை சார்ந்த நாகப்பட்டினம் மண்டலத்தின் பொது மேலாளர் - தூத்துக்குடி - திருச்செந்தூர் மார்க்கத்தில் இயங்கும் அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும் என கடுமையாக வலியுறுத்தி, ஜூலை 21 அன்று மீண்டும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 16, 2017; 8:55 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|