காயல்பட்டினத்தில் இடம் மாற்றப்படவுள்ள அஞ்சல் நிலையத்தை, பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கக் கோரும் பொதுமக்களின் கோரிக்கை மனுவை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம், காயல்பட்டினம் நகராட்சியிடமும், அஞ்சல் அலுவலரிடமும் இன்று சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் முதன்மைச் சாலையில் பல்லாண்டு காலமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் அஞ்சல் நிலையம் விரைவில் இடம் மாற்றப்படவுள்ளது.
அஞ்சல் நிலையத்திற்கான கட்டிடத்தை, காயல்பட்டினம் நகராட்சி கட்டுப்பாட்டிலான பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காலி இடங்களில் ஒன்றில் கட்டித் தர நகராட்சியைக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஒருங்கிணைப்பில் – நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து ஜமாஅத்துகள், கோவில்கள், கிறித்துவ தேவாலய நிர்வாகிகள், ஊர் நலக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் முத்திரையுடன் கூடிய கைச்சான்றுகள் பெறப்பட்ட கோரிக்கை மனு, காயல்பட்டினம் நகராட்சியில் – இன்று (16.08.2017. புதன்கிழமை) 10.30 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.
“நடப்பது என்ன?” குழும அங்கத்தினருடன், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து அம்மனுவை வழங்கினர்.
தொடர்ந்து, காயல்பட்டினம் அஞ்சல் நிலையத்தில், அஞ்சல் அலுவலரிடமும் இதே மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 16, 2017; 11:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையம் அமைந்திட – பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலி இடங்களைக் காண்பித்து, “நடப்பது என்ன?” குழுமம் தயாரித்து வெளியிட்டுள்ள வரைபடம்:-
|