இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், இன்று 08.30 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தலைமையேற்று, தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். உரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகரைத் தூய்மைப்படுத்துவதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவ்வப்போது குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் அதன் பிறகும் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதால், இந்நகரைச் சுத்தமாக வைப்பதில் பெரும் அவதி இருப்பதாகக் கூறினார்.
வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதால், அவரவர் வீடுகளில் பணி செய்ய ஊழியர்கள் வரும்போது, அவர்களைத் திருப்பியனுப்பாமல், உடனுக்குடன் பணியைச் செய்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை அகற்றி, நகராட்சியின் நிதி நிலைமை அடிப்படையில் படிப்படியாக புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார் அவர்.
நகராட்சியால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பளித்தால் மட்டுமே அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, நகராட்சி பொறியாளர் பாலமுருகன், மேலாளர் அறிவுச் செல்வன், பொதுமக்கள் சார்பில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா பெத்தாதாய், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி, எஸ்.கே.ஸாலிஹ், கோமான் சாகுல் ஹமீத் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
நகராட்சி உதவியாளர் அழகு முருகன் நன்றி கூறினார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்று மாணவியர் இவ்விழாவில், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார் குறித்த நாடகத்தை நடித்துக் காண்பித்தனர். அவர்களுக்கு நகராட்சியின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. பயிற்சியளித்த ஆசிரியையருக்கும், பங்கேற்ற மாணவியருக்கும் கத்தர் காயல் நல மன்ற ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கினார்.
இவ்விழாவில், நகராட்சி அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
|