முறையான அனுமதி பெறாமலேயே மீன்பிடித் துறைமுகப் பணிகளை மேற்கொண்டதாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் மீன்வளத் துறை செயற்பொறியாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம், பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை பகுதியில் - CRZ அனுமதி பெறப்படாமல், விதிமுறைகளை மீறி மீன்பிடி துறைமுக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேலும் - தடைசெய்யப்பட்ட உயர் - தாழ் அலை எல்லைகளுக்குள் (INTER-TIDAL ZONE), கான்க்ரீட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக - மத்திய,மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கு - நடப்பது என்ன? குழுமம் - மனு அனுப்பியிருந்தது. சாலைப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டாலும், விதிமீறி போடப்பட்ட சாலை இதுவரை அப்புறப்படத்தப்படவில்லை.
எனவே - விதிமீறி போடப்பட்ட சாலையை அப்புறப்படுத்த கோரியும், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டுமானங்களை அப்புறப்படுத்த கோரியும், விதிகளை மதிக்காமல் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - அதன் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
ஆகஸ்ட் 11 அன்று ஆணைப்பிறப்பித்த தீர்ப்பாயம், பணிகள் தொடரக்கூடாது என்றும், இதுவரை நடந்த பணிகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறியும் - செப்டம்பர் 21 தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
இதற்கிடையே, ஆகஸ்ட் 8 தேதிய கடிதம், மீன்வளத்துறையின் செயற்பொறியாளரிடம் இருந்து நேற்று (ஆகஸ்ட் 12) கிடைக்கப்பெற்றது.
அதில் - இப்பணிகளை மேற்கொள்ள, அந்நிலத்தில் நுழைவதற்கான அனுமதி - மாவட்ட ஆட்சியரிடம் கோரப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக கோட்டாட்சியர் தள ஆய்வு செய்ய கோரப்பட்டுள்ளதாகவும், CRZ அனுமதி பெற்றுத்தர - மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு கோரிக்கை வைக்கபப்ட்டதாகவும் - தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே விவரிக்கப்பட்டுள்ள எவ்வித அனுமதியும் இது வரை பெறப்படாமலேயே, பணிகள் செய்யப்பட்டு - நிறைவு தருவாயில் உள்ளன என்ற வேடிக்கையான தகவலும் அக்கடிதத்தில் உள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 13, 2017; 3:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|