வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள - சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு குறித்து விளக்குவதற்காக காயல்பட்டினத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்களில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் - சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு, இன்ஷாஅல்லாஹ் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று, காயல்பட்டினம் பெரிய சதுக்கை சந்திப்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாநாடு குறித்து காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை விளக்கப் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
துவக்கமாக வள்ளல் சீதக்காதி திடலிலும், அதனைத் தொடர்ந்து - பெரிய சதுக்கை சந்திப்பு, ஐசிஐசிஐ வங்கி முனை, இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகம் ஆகிய இடங்களிலும் விளக்கப் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, எஸ்.கே.ஸாலிஹ், முஹம்மத் முஹ்யித்தீன், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் விளக்கப் பேருரையாற்றினார்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசால் - இந்திய அரசியல் சாசன சட்டங்களையும் மீறி நடத்தப்பட்டு வரும் அத்துமீறல்கள் காரணமாக இன்று நாட்டில் அனைத்து சமய மக்களும் படும் அல்லல்களை விளக்கிப் பேசிய அவர், இக்கொடுமை இனியும் நீடிக்காதிருக்க – நாட்டு மக்கள் கருத்தொற்றுமை அடிப்படையில் களப்பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.
இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகமெங்கும் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் துவக்கமாக வரும் அக்டோபர் மாதம் 14ஆம் நாளன்று “சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு” காயல்பட்டினத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் கூறி, நாட்டு மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இம்மாநாடு முழு வெற்றியடையும் வகையில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் பரப்புரைக் கூட்டங்கள் நிறைவுற்றன. இ.யூ.முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.டீ.கமால், எம்.இசட்.சித்தீக், பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ், எம்.எம்.அஹ்மத், எம்.எச்.அப்துல் வாஹித், கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் ஆகியோருடன் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில், காயல்பட்டினம் நகர்நலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அதன் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரிடம் வழங்கினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத்
(தூ-டி. மாவட்ட செய்தி தொடர்பாளர்)
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
|