காயல்பட்டினம் நகராட்சி உட்பட, தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சிகளில் வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீதான மறுப்புரைகள், கருத்துக்கள் இருப்பின், 2018 ஜனவரி 02ஆம் நாளுக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட மறு வரையறை அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவு கருத்துருக்கள் மீது பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோருதல்
தமிழ்நாடு சட்டம் 23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வரைவு மறுவரையறையின் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப் பூர்வமாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 02.01.2018 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|