காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில், சென்ற 04.01.2018 & 05.01.2018 ஆகிய இரு நாட்களில் மாணவர்களுக்கான கலை-இலக்கியப் போட்டிகள் & கலை-அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இது குறித்து, அப்பள்ளியின் துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!
முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளி, சென்ற ஆண்டில் பல்வேறு கலை-இலக்கிய நிகழ்வுகளை சிறப்புற நடத்தியதை தாங்கள் அறிவீர்கள். அவற்றின் தொடர்ச்சியாக, 04.01.2018 வியாழக்கிழமை அன்று, கலை-இலக்கியப் போட்டிகளும், 05.01.2018 வெள்ளிக்கிழமை அன்று, கலை-அறிவியல் கண்காட்சியும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வுகளில், 8 வட்டார பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர். குறிப்பிட்ட சில போட்டிப் பிரிவுகளைத் தவிர, ஏனைய பெரும்பான்மையான நிகழ்ச்சிகள், மாணவிகளுக்கே நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கலை-இலக்கியப் போட்டிகள்
நிகழ்வின் முதலாம் நாளான 04.01.2018 அன்று, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கலை-இலக்கியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காலை 09:30 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சிகள், நான்கு தனிப் பிரிவுகளாக நடைபெற்றன. பிரிவுகள், போட்டிகள் & தலைப்புகளின் விபரங்களைக் காண, நிகழ்விற்கு முன்னர் வெளியிடப்பட்ட அழைப்பறிக்கையை, கீழுள்ள வலைபக்கத்தில் காண்க:
http://www.kayalpatnam.com/shownews.asp?id=20038.
நிகழ்ச்சிகளுக்கு, முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி வீ.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமையேற்றார். பள்ளியின் செயலாளர் அல்-ஹாஃபிழ் ஏ.எல்.சம்சுதீன், துணை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் & தலைமை ஆசிரியை சிரோன்மணி M.A, M.Phil, B.Ed ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின் துவக்கமாக, முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி M.T.ஆயிஷா தினூர் இறைமறை வசனம் ஓதினார். பள்ளியின் ஆசிரியை செல்வி வி.எஸ்.எம்.மஷ்கூரா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, மற்றொரு ஆசிரியையான செல்வி எம்.என்.செய்யது அஹ்மது ஃபாத்திமா வரவேற்புரையாற்றினார்.
கலை-இலக்கியப் போட்டிகளின் நடுவர்களாக முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னா மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் உஸ்தாதுகள் சிறப்புற பணியாற்றினார்கள்.
கலை & அறிவியல் கண்காட்சி
நிகழ்வின் இரண்டாம் நாளான 05.01.2018 அன்று, பள்ளி மாணவியருக்கான கலை & அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 09:30 முதல் நன்பகல் 12:30 மணி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவிகள் கலந்துகொண்டனர்.
8 வட்டாரப் பள்ளிகளைச் சார்ந்த இம்மாணவிகள், மொத்தம் 25 கலை & அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்தனர். முஹ்யித்தீன் பதின்ம பள்ளியை சார்ந்த மாணவிகள் தமிழ், அரபு, ஆங்கிலம், கணிதம், அறிவியல் & சமூக அறிவியல் ஆகிய துறைகளில் தனித்தனியாக படைப்புகளை வைத்திருந்தனர்.
இக்கண்காட்சியை மாணவிகள், பெற்றோர்கள் & பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளித்ததோடு, கண்காட்சியில் பங்கேற்ற மாணவிகளையும் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
அறிவியல் கண்காட்சியின் நடுவர்களாக சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் அப்துல் காதிர் மற்றும் எல்.கே. மேனிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் சிதம்பரம் & அப்துல் கஃபூர் ஆகியோர் சிறப்புற பணியாற்றினார்கள்.
பங்கேற்ற எட்டுப் பள்ளிகள்
இருநாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளி, சுபைதா மேனிலைப் பள்ளி, அல்-அமீன் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, விஸ்டம் பப்ளிக் பள்ளி, ஆறுமுகநேரி பியர்ல்ஸ் பபளிக் பள்ளி, உடன்குடி சல்மா பதின்ம பள்ளி & ஏரல் லோபா பதின்ம பள்ளி ஆகிய கல்விச்சாலைகளைச் சார்ந்த 100 மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முஹ்யித்தீன் பதின்ம மேனிலைப் பள்ளியின் துணை செயலாளர் ஒருங்கிணைப்பில், தலைமை ஆசிரியை, ஆசிரியைப் பெருமக்கள் & அலுவலக உதவியாளர் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.
நன்றி நவில்தல்
கலை-அறிவியல் கண்காட்சிக்கு நடுவர்களை அனுப்பிய சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & எல்.கே. மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்; கட்டுரை & பேச்சுப் போட்டிகளுக்கு நடுவர்களை அனுப்பிய முஅஸ்கர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கும், கண்காட்சியில் சிறப்பான முறையில் படைப்புகளை காட்சிப்படுத்தி தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கும், இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும். இதில், சிறப்பு பரிசாக தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & ஒளிப்படங்கள்:
கே.எம்.டீ.சுலைமான்
|