காயல்பட்டினத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைவதற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ளதையடுத்து, சகல வசதிகளுடன் நவீன முறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கட்டிட நிதி ஒதுக்கிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு - காயல்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (URBAN PHCs) அமைக்க அரசாணை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட இடம் கோரி - பல்வேறு ஜமாஅத்துகளுக்கு முன் வைத்த கோரிக்கையை அடுத்து, பல ஜமாஅத்துகள் - இடம் தர முன்வந்தன.
அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பிறகு, நகர்மன்ற தீர்மானமாக - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் இலவசமாக தர முன்வந்த 50 சென்ட் நிலம், ஏப்ரல் 2012 இறுதியில் தேர்வு செய்யப்பட்டது.
செப்டம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த வாடகை கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிட துவங்கியது.
இருப்பினும் - 2013 இல், தணிக்கைத்துறை - காயல்பட்டினம் மக்கள் தொகைக்கு, ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க - ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமா என்ற ஆட்சேபனையை எழுப்ப - புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்க முடியாத சூழல் எழுந்தது.
தணிக்கை ஆட்சேபனையை நீக்க - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத்தினர் பல்வேறு முயற்சிகளை செய்தனர்.
கடந்த சில மாதங்களாக - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக, இது தொடர்பாக - தொடர் முயற்சிகள், சென்னை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இறைவனின் உதவியால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தணிக்கை ஆட்சேபனை (AUDIT OBJECTION) கைவிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ள நிலையில், கோமான் மொட்டையார் ஜமாஅத் அன்பளிப்பாக வழங்கியுள்ள 50 சென்ட் நிலத்தில், நவீன, அனைத்து வசதிகளையும் கொண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட உடனடியாக நிதி ஒதுக்கிட கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை திரு என்.வெங்கடேஷ் IAS இடம் இன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இவ்வேளையில் - இது சம்பந்தமாக அரசு வெளியிட்ட அரசாணை விபரங்களை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் - தணிக்கைத்துறை அனுப்பியுள்ள ஆட்சேபனை நீக்கம் குறித்த ஆவணத்தின் நகலும், மாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.
இறைவன் நாடினால், இது சம்பந்தமான பிற அதிகாரிகளையும் - சென்னையிலும், தூத்துக்குடியில் நேரடியாக சந்தித்து, ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் நகரில் உருவாகிட - அனைத்து முயற்சிகளையும் நடப்பது என்ன? குழுமம் மேற்கொள்ளும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 22, 2018; 11:00 pm]
[#NEPR/2018012203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|