“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இரத்த வங்கிகள், மூலம், நாட்டின் இரத்த தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என இந்திய அரசாங்கத்தின் இரத்த தான கொள்கை (NATIONAL BLOOD POLICY) - தெரிவிக்கிறது. இதன் மூலம் - முற்றிலும் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தம், தேவையானவர்களுக்கு, தேவையான நேரத்தில் சென்றடையும் என்றும் அந்த கொள்கை தெரிவிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் தனியார் மருத்துவமனைகள், இந்த கொள்கைக்கு மாற்றமாக செயல்புரிகிறார்கள்.
சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், அவர்களுக்கு இரத்த தேவை ஏற்படும் போது - மாற்று இரத்த கொடையாளர்கள் (REPLACEMENT DONORS) கொண்டு வந்தால் தான் இரத்தம் தேவை பூர்த்தி செய்யமுடியும் எனக்கூறி - அலைகளைக்கப்படுகிறார்கள். இதனால் - அந்நோயாளிகளின் குடும்பத்தினர் பெருத்த சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.*
இது சம்பந்தமாக ஜனவரி 8 அன்று மாவட்ட ஆட்சியர் வாயிலாக - கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அம்மனுவிற்கு - சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் அலுவலகம் (தூத்துக்குடி) வாயிலாக பதில் பெறப்பட்டுள்ளது.
அந்த பதில் வருமாறு:
மனுதாரா் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள சில தனியார் மருத்துவமனைகளில் திடீா் ஆய்வு செய்ததில் நோயாளிகளுக்கு தேவைப்படும் இரத்தம் அருகில் உள்ள இரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் நோயாளிகள் அழைத்துவரும் இரத்த கொடையாளிகளிடம் இருந்து பெறப்பட்டு உரிய பரிசோதனைகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இரத்த கொடையாளா்களை அழைத்து வர கட்டாயப்படுத்துவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணை இயக்குனர் அலுவலகம் வழங்கியுள்ள பதில் - நிதர்சன உண்மைகளை தெரிவிக்கும் வகையில் இல்லை.
மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவுடன், அவர்களுக்கு இரத்த தேவை என்றால் - சமூக ஊடகங்கள் வாயிலாக, இரத்த கொடையாளர்கள் கோரி - மருத்துவமனை வேண்டுகோளாக - தகவல்கள் பரிமாறப்படுவது அனைவரும் அறிந்தது.
எனவே - தனியார் மருத்துவமனைகளை - சொந்த இரத்த வங்கி துவங்கவோ, அல்லது ஏற்கனவே உள்ள இரத்த வங்கிகளோடு புரிந்துணர்வு ஏற்படுத்தி கொள்ளவோ அறிவுறுத்தியும், நோயாளிகளின் உறவினர்களை உடனடியாக இரத்தம் வழங்கிட நிர்பந்தம் செய்யவேண்டாம் என மருத்துவமனைகளை அறிவுறுத்தியும், அரசு / சுகாதாரத்துறை மூலமாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 23, 2018; 8:00 am]
[#NEPR/2018012301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|