துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் காயல்பட்டினம்-ரத்தினபுரியில் உள்ள துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில், 16.01.2018 அன்று “சிறீ ரஜ சிறீ” எனும் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
இது குறித்து, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!
துளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் சென்ற 16.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று, துளிர் சிறப்பு பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் துளிர் சிற்றரங்கத்தில் - “சிறீ ரஜ சிறீ” எனும் சிங்கள மொழி படம் திரையிடப்பட்டது.
நிகழ்முறை
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் துளிர் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் ஆரிஃப், திரைப்படத்தின் அறிமுக விளக்க உரையாற்றினார்.
சுமார் 80 நபர்கள் இத்திரையிடலில் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கான கட்டணமில்லா நுழைவு சீட்டு - நகரின் ஐந்து இடங்களில் விநியோகிக்கப்பட்டது.
“சிறீ ரஜ சிறீ” - கல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் படம்
சமூகத்தில் புரையோடிப்போன எல்லா வகையான ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள், மோதல்களில் குறிப்பிட்ட சதவிகிதமானது நமது கல்விக் கூடங்களில் எதிரொலிக்காமல் இருப்பதில்லை. அத்தகைய முரண்கள் மோதல்களிலிருந்து ஒரு துளியை தொட்டெடுத்து கலையால் கையாண்டிருக்கின்றார் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சோமா ரத்ன திசா நாயக்கே (Somaratne Dissanayake).
2008 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், கீழ்கண்ட பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளது:
• Jury mention Award for best film - (Mexico int. children film festival 2008 -Mexico)
• Silver Knobi Award for best film-(Lola int. children film festival 2008 – Kenya
• Signis jury Award for the best film-(Agentina int. children film festival 2008 – BuenisIris, Argentina)
• CamerioHumanitas Award (Rimouski int. Children film fest. 2008 – Canada)
• Cifej Award (Rimouski int. Children film fest. 2008 – Canada)
• Best child actor - (Chinese International children film festival 2009)
கதைச் சுருக்கம்
இலங்கையின் கிராமப்புற பள்ளியிலிருந்து உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுகிறான் 11 வயது நிரம்பிய மாணவன் சிறீமல் (கோகில பவன் ஜய சூரிய).
மேற்படிப்புக்காக கொழும்பில் உள்ள பள்ளிக்கு சேருவதில் அவன் சந்திக்கும் சிக்கல்கள் திரைக்கதையாக விரிகின்றது. ஒற்றைக்கழி கொண்டு ஆழ் பள்ளம் தாண்டுவது போல சிறீமல் தனக்குள் உறைந்திருக்கும் உன்னதமான ஒரு ஆளுமையை அதன் முழு வீச்சில் வெளிப்படுத்துவதன் வாயிலாக தான் சந்திக்கும் சிக்கல்களை கடந்து செல்கின்றான். இதுதான் மொத்த படத்தின் கரு.
படத்தின் மைய ஓட்டம் கல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், பேதங்களையும் அதை வெற்றிகரமாகத் தாண்டும் கிராமிய மன நிலையையும் பற்றி மட்டும் பேசுவதோடு நிற்கவில்லை.
கிராமிய வாழ்க்கையில் நிலவும் உற்பத்தி, பகிர்வு, நகர வாழ்க்கையில் நிலவும் நுகர்வு வெறி, தாய் மொழிப்பற்றை மிகைக்கும் ஆங்கில மோகம், சொந்த பண்பாட்டிலிருந்தும் மரபிலிருந்தும் துண்டிக்கப்பட்ட இளைய தலைமுறை, பணத்தைக் கொண்டு தங்களுக்கு வேண்டிய எதையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அகங்கார மொழி வழிந்தோடும் மனித நடவடிக்கைகள் போன்றவற்றையும் காட்சிப்படுத்துகின்றது.
உழைப்பிற்கு பிந்திய ஓய்வானது நாட்டுப்புறங்களில் மட்டுமே கிடைக்கும் அருட்கொடை. அந்த வளமான களத்தில்தான் நாட்டாரியல் கலைகள் துளிர்க்கின்றன. சூடும் சலிப்பும் ஏறிய மனித புலன்களை குளிர்வித்து அமைதிப்படுத்துகின்றன என்பதையும் இப்படம் நிரூபிக்கின்றது.
பார்வையாளர்கள் கருத்துப் பரிமாற்றம்
திரையிடலுக்குப் பின்பு, திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாற்றம் நடைப்பெற்றது. பெரும்பான்மையாக திரைப்படம் குறித்து மேன்மையான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற திரைப்படங்கள் தொடர்ந்து துளிர் மற்றும் நமது பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் திரையிடப்பட வேண்டும் என கோரிக்கைகள் பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் துளிரின் செயலர் சேக்னா லெப்பை நன்றியுரையாற்றினார். பார்வையாளர்கள் அனைவருக்கும் சிறுகடி/குடியுடன் வழங்கியதோடு நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது!
திரையிடலுக்கான ஏற்பாடுகளை துளிர் அறக்கடடளையின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் & துளிர் அறக்கடடளையின் நிர்வாக உறுப்பினர் சித்தி ரம்ஜான் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
துளிர் அறக்கட்டளை – காயல்பட்டினம்
காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளை பல்வேறு சமூக நோக்கம் கொண்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் கவனம் பெற்ற உலக சினிமாக்களை திரையிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு துளிர் அறக்கட்டளையின் 2-ஆவது திரையிடலாகும். முன்னதாக, 17.12.2017 ஞாயிறன்று “தி கலர் ஆப் பேரடைஸ்” எனும் ஈரானிய படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு
சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.
இந்நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 25-ஆவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> ஜன. 16-இல் சிங்களப் படம் திரையிடல் நிகழ்வு – இன்று முதல் நகரின் ஐந்து இடங்களில் கட்டணமில்லா நுழைவு சீட்டு விநியோகம்!! துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் ஏற்பாடு!!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=20111
2> துளிர் அறக்கட்டளை சார்பில், கண் பார்வையற்ற சிறுவனின் வாழ்வைச் சித்தரிக்கும் சர்வதேச திரைப்படம் திரையீடு!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=20035
3> எழுத்து மேடை மையத்தின் சமீபத்திய நிகழ்ச்சி: காந்தி குறித்த அரிய ஆவணப்பட திரையிடல் & காந்திய பொருளாதாரம் குறித்த ஜே.சி.குமரப்பாவின் நூலாய்வு!!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=20100
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்படங்கள் & தகவல்:
அப்துல் ரஹ்மான் & கத்தீப் மாமூனா லெப்பை
செய்தியாக்கம்:
அப்துல் ரஹ்மான் & சாளை பஷீர் ஆரிஃப்
|