காயல்பட்டினத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைவதற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிபடப்பட்டதாக, மதுரையிலுள்ள மூத்த தணிக்கை அலுவலர் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு அக்குழுமம் சார்பில் நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு - காயல்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (URBAN PHCs) அமைக்க அரசாணை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட இடம் கோரி - பல்வேறு ஜமாஅத்துகளுக்கு முன் வைத்த கோரிக்கையை அடுத்து, பல ஜமாஅத்துகள் - இடம் தர முன்வந்தன.
அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பிறகு, நகர்மன்ற தீர்மானமாக - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் இலவசமாக தர முன்வந்த 50 சென்ட் நிலம், ஏப்ரல் 2012 இறுதியில் தேர்வு செய்யப்பட்டது.
செப்டம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த வாடகை கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிட துவங்கியது.
இருப்பினும் - 2013 இல், தணிக்கைத்துறை - காயல்பட்டினம் மக்கள் தொகைக்கு, ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க - ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமா என்ற ஆட்சேபனையை எழுப்ப - புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்க முடியாத சூழல் எழுந்தது.
தணிக்கை ஆட்சேபனையை நீக்க - அப்போதைய நகர்மன்றத் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத்தினர் பல்வேறு முயற்சிகளை செய்தனர்.
கடந்த சில மாதங்களாக - நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் சார்பாக, இது தொடர்பாக - தொடர் முயற்சிகள், சென்னை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இறைவனின் உதவியால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தணிக்கை ஆட்சேபனை (AUDIT OBJECTION) கைவிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - இன்று மதுரையில், மூத்த தணிக்கை அலுவலரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இறைவன் நாடினால், கோமான் ஜமாஅத் - அன்பளிப்பாக அரசுக்கு வழங்கியுள்ள நிலத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட - நிதி ஒதுக்கவும், விரைவில் கட்டுமான பணிகளை துவக்கவும் - நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 19, 2018; 8:30 pm]
[#NEPR/2018011901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|