காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் நடத்தப்பட்ட மீலாத் விழாவில், போட்டிகள் பல நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளியருகில் கடந்த 33 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம். இதன் சார்பில் ஆண்டுதோறும் மீலாத் விழாக்கள் நடத்தப்பட்டு, சன்மார்க்கப் போட்டிகள் நடத்தி - பரிசுகளும் வழங்கப்படுவது வழமை.
நடப்பாண்டு மீலாத் விழா மற்றும் அமைப்பின் 34ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள், ஹிஜ்ரீ 1439 - ரபீஉல் ஆகிர் 18, 19 ஆகிய நாட்களில், (2018 ஜனவரி மாதம் 06, 07 சனி, ஞாயிறு நாட்களில்) நடைபெற்றன.
06.01.2018. சனிக்கிழமையன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சில சிறுவர்களை பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் சென்று, சுன்னத் செய்யும் வைபவம் நடத்தப்பட்டது.
காலை அமர்வு:
09.00 மணிக்கு, நபிகள் நாயகம் புகழோதும் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது.
மாலை அமர்வு:
16.30 மணிக்கு, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சன்மார்க்கப் பேச்சுப் போட்டி, “உத்தம நபிகளார் உம்மத்தின் மீது கொண்ட கவனம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.
இரவு அமர்வு:
18.30 மணியளவில், கே.ஏ.எல்.முஹ்யித்தீன் தம்பி, எஸ்.ஏ.கே.முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய அமர்வை, ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எம்.எஸ்.கே.முஹம்மத் இப்றாஹீம் வரவேற்புரையாற்றினார்.
இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய – ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ தலைமையுரையாற்றினார்.
மவ்லவீ எஸ்.டீ.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ சீருரையாற்றினார்.
“அகிலம் வியக்கும் அற்புதத் தலைவர்” எனும் தலைப்பில், தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.முஹம்மத் முஸ்தஃபா சிறப்புரையாற்றினார்.
துஆ - ஸலவாத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இரண்டாம் நாள் காலை அமர்வு:
07.01.2018. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக, அன்று 09.15 மணியளவில், அருள்மறை குர்ஆனை அகத்திலேந்திய ஹாஃபிழ்களுக்கான - திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்றது.
மாலை அமர்வு:
16.30 மணிக்கு, நபிகளார் புகழ் பாடும் நஅத் மஜ்லிஸ், கம்பல்பக்ஷ் ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ் & மாதிஹுர் ரஸூல் குழுவினரால் நடத்தப்பட்டது.
இரவு அமர்வு:
கத்தீபு எம்.என்.முஹம்மத் இப்றாஹீம், எம்.எம்.பீ.முஹ்யித்தீன் ஷிஃபாஉல் கரீம் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய இரவு அமர்வை, முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நெறிப்படுத்தினார். மஹ்ழரா அரபிக் கல்லூரியின் குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
வரவேற்புரையைத் தொடர்ந்து, இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – கோவை – குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் ஹனஃபீ சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.அப்துல் மாலிக் ஸிராஜீ, “அண்ணல் நபிகளாரை நடைமுறைப்படுத்துவோம்!” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இக்ராஃ மூலம் ரூ. 30 ஆயிரம் கல்வி உதவித்தொகை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகைக்காக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி - தொகையை வழங்க, இக்ராஃவின் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், செயற்குழு உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் அதைப் பெற்றுக்கொண்டனர்.
பரிசளிப்பு:
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹிஃப்ழுப் போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ரூபாய் 4000, 3000, 2000 பணப்பரிசுகளும், பேச்சுப்போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ருபாய் 2000, 1500, 1000 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை, பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஊண்டி எஸ்.கிதுரு முஹம்மத் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.
சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
|