காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் உள்ள – அரசு விதிமுறைகளுக்கெதிரான குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபணைக் கடிதங்களை நகராட்சியிடம் ஏற்கனவே வழங்கியுள்ளது. இவ்வாறான மறுவரையறை சமூகங்களுக்கிடையில் அவசியமற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் என அக்குழுமம் மீண்டும் நகராட்சி ஆணையரிடம் ஆட்சேபனைக் கடிதம் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
டிசம்பர் மாதம் இறுதியில் - காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான - சீரமைக்கப்பட்ட, வரைவு வார்டுகள் விபரம் - வெளியிடப்பட்டது.
நகராட்சியினால் வெளியிடப்பட்ட அந்த வார்டுகள் விபரம், பொது மக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 12க்கு முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் – மாவட்ட மறுவரையறை அலுவலரான மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - பல்வேறு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஆட்சேபனை கடிதங்கள் ஜனவரி 2, ஜனவரி 4 மற்றும் ஜனவரி 5 தேதிகளில், தலைவர், மறுவரையறை ஆணையம் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், சென்னை), மாவட்ட மறுவரையறை அதிகாரி (மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி) மற்றும் வார்டு மறுவரையறை அலுவலர் (ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி) ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
ஜனவரி 11 அன்று மாவட்ட ஆட்சியரிடமும், ஜனவரி 12 அன்று நகராட்சி ஆணையரிடமும் - மீண்டும் ஆட்சேபனை கடிதம் வழங்கப்பட்டது.
அதில் - அக்டோபர் 16, 2017 அன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக - பொது மக்களின் கருத்துக்கள், முன்னரே கேட்கப்படவேண்டும் எனக்கோரி வழங்கப்பட்ட மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் - தன்னிச்சையாக இந்த மறுவரைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்த நோக்கத்திற்காக வார்டுகளை வரைமுறை செய்ய, பழைய வார்டுகள் ஒழிக்கப்பட்டதோ, அந்த நோக்கப்படி - மறுவரையறை செய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"... In order to give effect to the constitutional requirements to conduct ordinary elections to the local bodies with delimitation of territorial area into divisions or wards based on the latest census as recommended by the Delimitation Commission constituted under the Tamil Nadu Delimitation Commission Act, 2017 (Tamil Nadu Act 23 of 2017)..."
Explanatory Statement to Tamil Nadu Local Bodies (Amendment) Ordinance, 2017 - dated September 3, 2017
மேலும் - நகராட்சி பின்பற்றியுள்ள மறுவரைமுறை - முற்றிலும் வீட்டுதீர்வைகள் எண்ணிக்கை அடிப்படையிலானது; 2011 மக்கள் தொகை கணக்கு - கண்துடைப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது; எவ்வாறு அந்த தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மறுவரைமுறையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் சூழல்களை அறியாதவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு வார்டுகள் பட்டியலால், நகரில் சமூகங்களுக்கு இடையிலே, அவசியமற்ற வகையில் பதற்றம் ஏற்படும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே - 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை விபரம் இல்லாத பட்சத்தில், வீட்டுதீர்வைகள் எண்ணிக்கை அடிப்படையிலான வார்டுகள் மறுவரையறை மேற்கொள்ளாமல், நடப்பது என்ன? குழுமம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள - வாக்காளர்கள் பட்டியல் அடிப்படையிலான பரிந்துரை வார்டுகள் பட்டியலை ஏற்று, அமல்படுத்தவேண்டும் எனக்கோரி மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 13, 2018; 8:30 am]
[#NEPR/2018011302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|