14.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் சார்பில், எழுத்தாளர் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் வெளியிடப்படுகிறது. விரிவான விபரம் வருமாறு:-
எழுத்து மேடை கட்டுரையாளர்
காயல்பட்டினம்.காம் எழுத்து மேடை பகுதியின் 18 கட்டுரையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாளை பஷீர் ஆரிஃப். இவரும் மர்ஹும்
ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமாவும், இப்பகுதிக்காக மிகுதியான (38) கட்டுரைகளை தீட்டியுள்ளனர்.
கூடவே, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் விளங்குகிறார். சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள் & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக இவ்வமைப்பு விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள் தனித்துவமான ஒரு மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு & வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாளுதல் என இவ்வமைப்பு பல்வேறு விசயங்களை சிறப்பான முறையில் வலியுறுத்துகிறது.
உலகமயமாக்கம் & ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை கூட்டுவது & அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.
பொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி, கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதையும்; வறுமை, எழுத்தறிவின்மை & ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்களால் மேலும் தீவிரமாக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, 60-க்கும் மேற்பட்ட காத்திரமான சூழலியல் நூல்களை இவ்வியக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூவுலகும்… காயலும்…
பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கும் காயல்பட்டினத்திற்கும் ஒரு ஆழமான தொடர்பு உண்டு. அந்நெருக்கத்தின் தொடக்கமாக, இவ்வமைப்பின் பிரபல ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) அமைப்பின் சார்பில் காயல்பட்டினம்.காம் இணையதள நிர்வாகி எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ் எழுதிய ‘மக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்’ எனும் சிறப்புக் கட்டுரை, 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியானது.
அதன் பின்னர், 16.03.2013 அன்று நமதூரின் இலக்கிய ஆர்வலர்களால் துவங்கப்பட்ட ‘எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு’ அமைப்பின் அறிமுக நிகழ்வில் பூவுலகின் நண்பர்கள் குழுமத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் பங்கேற்று சிறப்பித்தார்.
24.05.2013 முதல் 26.05.2013 வரை, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில், பாபநாசம் அருகே பொதிகை மலை அடிவாரத்தில் நடத்தப்பட்ட ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சிப் பட்டறையின் உரை சுருக்கங்களை, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு விரிவாக வெளியிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, 01.01.2014, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் காயல் மாநகரில் ஆவணப்படங்களை திரையிடும் முயற்சிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அங்கத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மலைப்பாடகனும்… விதையிலிருந்தே மரமும்…
இதே ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சி பட்டறை நிகழ்வினை மையப்பொருளாகக் கொண்டு, 05.07.2013 அன்று – காயல்பட்டினம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியில் சாளை பஷீர் ஆரீஃப் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதன் தலைப்பே ‘மலைப்பாடகன்’!
சாளை பஷீர் ஆரிஃபின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து, இதே தலைப்பில் தற்போது புத்தகமாக வெளியிடுகின்றனர் பூவுலகின் நண்பர்கள். இக்கட்டுரைகள், காயல்பட்டினம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை பகுதியிலும்; தி இந்து தமிழ், காலச்சுவடு, குமுதம் தீராநதி & காக்கைச் சிறகினிலே ஆகிய நாளிதழ் & சிற்றிதழ்களிலும் வெளியானவை.
நூல் வெளியீடு
சென்னையில் நடைபெற்று வரும் 41-ஆவது புத்தகக் கண்காட்சியின் போது, 14.01.2018 அன்று ‘மலைப்பாடகன்’ நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
மலைப்பாடகன் - சாளை பஷீர்
மாற்று சூழலியல் வாழ்வைப் பேசும் நூல்
வெளியிடுபவர்- தோழர் பிரபலன் (பூவுலகின் நண்பர்கள்)
பெற்றுக் கொள்பவர்- கவிஞர் குட்டி ரேவதி
நாள் 14-01-2018
ஞாயிறு மாலை 6-30 பொங்கலன்று
கருத்து பட்டறை அரங்கு (கடை எண் 244)
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கீழே:
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தொடர்பு விபரம்:
பூவுலகின் நண்பர்கள்
AM-77, 14 வது மெயின் ரோடு,
சாந்தி காலனி, அண்ணா நகர்,
சென்னை - 600 040.
அலைபேசி: 9500186661 / 9444940034
மின்னஞ்சல்: info@poovulagu.org
வலைதளம்: http://www.poovulagu.org
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில், ‘மக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்’ – சிறப்புக் கட்டுரை
(21.01.2013; http://www.kayalpatnam.com/shownews.asp?id=9987)
2> ‘எழுத்து மேடை மையம்’ அறிமுக நிகழ்ச்சி! பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் பங்கேற்பு!!
(16.03.2013; http://kayalpatnam.com/shownews.asp?id=10458)
3> பொதிகை மலை அடிவாரத்தில் ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சிப் பட்டறை
(24-26.05.2013; http://www.kayalpatnam.com/shownews.asp?id=10991)
4> ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சி பட்டறை – நிகழ்ச்சி சுருக்கம்!
(25.06.2013; முதல் நாள் - http://www.kayalpatnam.com/shownews.asp?id=11103;
இரண்டாம் நாள் - http://www.kayalpatnam.com/shownews.asp?id=11104 &
மூன்றாம் நாள் http://www.kayalpatnam.com/shownews.asp?id=11105)
5> ‘மலைப்பாடகன்!’ – பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நடத்திய ‘விதையிலிருந்தே மரம்’ பயிற்சி பட்டறைக் குறித்த சாளை பஷீர் ஆரிஃபின் எழுத்து மேடை கட்டுரை
(05.07.2013; http://www.kayalpatnam.com/columns.asp?id=95)
6> எழுத்து மேடை மையம் நடத்திய கலந்துரையாடல்! ஆவணப்படங்களை நகரில் திரையிட செயல்திட்டம்!!
(01.01.2014; http://www.kayalpatnam.com/shownews.asp?id=12780)
சாளை பஷீர் ஆரிப் கட்டுரைகள்
1> காயல்பட்டினம்.காம்
http://www.kayalpatnam.com/columnsbyauthor.asp?id=basheer
2> தி இந்து தமிழ்
http://tamil.thehindu.com/profile/author/சாளை-பஷீர்/
|