“நடப்பது என்ன?” குழுமத்தின் பெண் நிர்வாகிகளது தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் தைக்கா பள்ளியின் பழைய – பழுதடைந்த கட்டிடம் இடித்தகற்றப்பட்டுள்ளது. இதற்காக, குழுமத்தின் சார்பில் அரசுக்கு நேரடியாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தைக்கா தெருவில், ஸாஹிப் அப்பா தைக்கா கொடிமரத்திற்கு மேற்கே தைக்கா பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தற்போது நடுநிலைப் பள்ளி) இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அது சிவன்கோவில் தெருவில் புதிய கட்டிடத்தில் இயங்கத் துவங்கியதையடுத்து, இந்த பழைய கட்டிடம் செயல்பாடற்றுக் கிடந்தது.
இதன் காரணமாக அக்கட்டிடம் - சமூக சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெறும் இடமாக உள்ளதாக அப்பகுதி மக்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகளிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பாக - சென்னை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு அதிகாரிகளை, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்து, மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக - கடந்த ஆகஸ்ட் 23 அன்று மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் IAS - அப்பழைய கட்டிடத்தை இடித்திட உத்தரவிட்டார். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
அதன் தொடர்ச்சியாக, இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, கடந்த வாரம் பழைய தைக்கா பள்ளி இடிக்கப்பட்டது.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, பழைய கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுத்த - தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சியர், ஊராட்சிகளின் துணை இயக்குனர் மற்றும் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு நேரடியாக நன்றி கடிதம் நேற்று (ஜனவரி 11) வழங்கப்பட்டது.
இது சம்பந்தமாக உத்தரவுகள் பிறப்பித்த, சென்னையில் உள்ள - பள்ளிக்கல்வி அரசு செயலர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு செயலர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் - இடிக்கப்பட்ட இடத்தில், பள்ளிக்கூடத்திற்கு பயனுள்ள வகையில் புதிய வசதிகளை வழங்கிடவும், அக்கடிதத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 12, 2018; 7:30 am]
[#NEPR/2018011201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|