காயல்பட்டினத்தில் 6 வயது சிறுமி நேற்று காலமானார். அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்த பெற்றோரால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. விரிவான விபரம்:-
கோயமுத்தூரைச் சேர்ந்த ஸைஃபுல்லாஹ் - மர்யம் ஆகியோர் இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டவர்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமான மர்யமுக்கு சுலைமான், யூஸுஃப் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். 7 ஆண்டுகளுக்கு முன் - அடுத்தடுத்த ஆறு மாதங்களில் அவ்விருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.
இந்நிலையில், ஸைஃபுல்லாஹ் - மர்யம் தம்பதிக்கு அடுத்த ஆறு மாதங்களில் ஸமீஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. 6 வயதான இச்சிறுமிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுகவீனத்திற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 05:30 மணிக்குக் காலமானார்.
நேற்றிரவு இஷா தொழுகைக்குப் பின், அவரது ஜனாஸா - காயல்பட்டினம் காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொழுகையிலும், நல்லடக்கத்திலும் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும் - சிறுமியின் தந்தை ஸைஃபுல்லாஹ் உருக்கமாக உரையாற்றினார். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தான் நல்லொழுக்க உரைகளாற்றி வருவதாகக் கூறிய அவர், இவ்வாறான தருணங்களில் பொறுமையைக் கைக்கொள்வதற்குப் பொதுமக்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றெண்ணியதன் காரணமாகவே - தானாக முன்வந்து உரையாற்றுவதாக அவர் கூறினார். தமக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்குமாறு உரையின் நிறைவில் அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்தடுத்து அனைத்து மக்களையும் இழந்துள்ள பெற்றோரைப் பார்த்து ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. |