சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், விரைவில் நடைபெறவுள்ள அதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 19.01.2018. அன்று 19.45 மணிக்கு மன்ற அலுவலகத்தில், ஹாஃபிழ் கே.டீ.ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத்துடன் துவங்கியது.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் தலைமையுரையாற்றினார். தற்போதைய நிலையை விட இன்னும் அதிகளவில் நகர்நலப் பணிகள் செய்வதற்கு, மன்றத்தின் நிதியாதாரத்தை இன்னும் பெருக்க வேண்டியது அவசியம் என்றும் - உண்டியல் நிதி, ஒன்றுகூடல் நிகழ்வுகளில் திரட்டப்படும் நிதி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் உறுப்பினர்கள் என்றும் போல் மனப்பூர்வமாகவும், தாராளமாகவும் வாரி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வாசித்து, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். எம்.எச்.உமர் ரப்பானீ முன்மொழிய, கே.டீ.ஷாஹுல் ஹமீத் பாதுஷாவின் வழிமொழிதலுடன் அவ்வறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வரவு – செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கூட்டத்தில் சமர்ப்பித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஷிஃபா மூலம் மருத்துவ உதவிக்காக 44,400 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
முதியோர் நல நிதிக்காக 2018 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான செலவினங்களுக்கு 27,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நலத்திட்ட நிதியொதுக்கீடுகள் – காலாண்டு நிதியறிக்கை அடிப்படையில் உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
நிகழாண்டு நிரல்:
நிகழும் 2018ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நலத்திட்டப் பணிகளை பின்வருமாறு செய்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது:-
ஷிஃபா செயல்பாடுகள்:
ஷிஃபா அறக்கட்டளையால் அண்மையில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட அறங்காவலர் கலந்தாலோசனைக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, மன்றத் தலைவர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் விளக்கினார். வாக்களிக்கப்பட்ட மருத்துவ உதவித்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கு, மன்றத்தின் மருத்துவக் குழு பரிசீலனையைத் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மக்கள் மருந்தகத்தின் நடப்பு செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.
இக்ராஃ செயல்பாடுகள்:
இக்ராஃவின் அண்மைச் செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, அதன் தலைவரும் – சிங்கை மன்றச் செயலாளருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கினார். இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத் தலைமை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவில் – நடப்பு பருவத்தையடுத்த புதிய நிர்வாகத் தேர்ந்தெடுப்பின்போது, தலைமைப் பொறுப்பை குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது.
இக்ராஃவின் – உயர் பட்டப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை திட்டம் (I-UPCS) குறித்து அவர் விளக்க, இத்திட்டத்தில் இணைந்திட கொள்கையளவில் இசைவு தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறை விபரங்கள்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவையொட்டி விரைவில் நடத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டிகள் குறித்து, அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான ஜெ.எஸ்.தவ்ஹீத், பி.அஹ்மத் ஜமீல் ஆகியோர் விளக்கிப் பேசினர். வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகளின்போது விளையாட்டுப் போட்டி நிரல் அறிவிக்கப்படும் என்றும், போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்த உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், நன்றியுரை - துஆவுடன் 21.30 மணியளவில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. குழுப்படப் பதிவைத் தொடர்ந்து அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
M.M.மொகுதூம் முஹம்மத்
(செயலாளர், KWAS)
தமிழாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
|