காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேவர் ப்ளாக் சாலையைத் தவிர்த்து தரமான தார் சாலை அமைத்தல், பேருந்து நிலைய வளாகத்தில் அஞ்சல் நிலைய அலுவலகம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் குறித்து - தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பீ.வேலுமணி ஆகியோரிடம் “நடப்பது என்ன?” நேரில் சந்தித்து விளக்கியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நகரின் ஐந்து பிரதான சாலைகளை (அப்பாபள்ளி தெரு, சொலுக்கார் தெரு, மஃதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு) பேவர் பிளாக் கற்கள் கொண்டு புனரமைக்க - காயல்பட்டினம் நகராட்சி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது. இந்த பகுதிகளில் - பேவர் பிளாக் சாலைகளுக்கு பதிலாக, தரமான தார் சாலைகள் வரவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி ஜமாஅத்துகள் / பொது மக்கள் கையெழுத்திட்ட மனு - துறைசார் அதிகாரிகளிடம் சமீபத்தில் கொடுக்கப்பட்டது.
அது போல - தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் காயல்பட்டினம் தபால் நிலையம், வேறு இடத்திற்கு மாற்றப்படவேண்டிய சூழல் எழுந்துள்ளதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடமே இதற்கு பொருத்தமான இடம் என தபால் நிலைய அதிகாரிகள், பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து - இது சம்பந்தமான கோரிக்கையும், சில மாதங்களுக்கு முன்பு - நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துக்கள், பொது மக்கள் கையெழுத்துடன் - துறைசார் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்ற வலியுறுத்தி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களை சென்னையில், நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள், நேற்று (ஜனவரி 29) தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.
இக்கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த அமைச்சர் திரு ராஜு, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியிடம் இவ்விஷயங்களை தான் பரிந்துரைப்பதாகவும், உடனடியாக உள்ளாட்சித்துறை அமைச்சரை நேரடியாக சந்திக்கவும் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களை - நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரடியாக நேற்று சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இது சம்பந்தமாக துறைசார் அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிப்பதாக உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜனவரி 30, 2018; 5:00 pm]
[#NEPR/2018013001]
அதன் தொடர்ச்சியாக - ஜனவரி 30 அன்று காலை, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல அதிகாரிகளை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து - இவ்விஷயங்கள் குறித்து, விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வேளையில் - இது சம்பந்தமான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாக, அதிகாரிகள் - நடப்பது என்ன? குழுமத்திடம் உறுதியளித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |