காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் CCTV கேமராக்களை நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்குக் கெடு விதிக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக - பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம்.
குற்றங்களை தடுக்க, பொது இடங்களில் CCTV கேமராக்கள் நிறுவ - நகர்மன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், இது சம்பந்தமான பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டபிறகும் அலட்சியம் காண்பித்து வரும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்க கோரி பிப்ரவரி 5, 2018 அன்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு மஹேந்திரன் ஆகியோரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொது மக்களின், பொது இடங்களின் பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு - தமிழக அரசு, 2012 ஆம் ஆண்டு - The Tamil Nadu Local Bodies [Installation of CCTV units in public buildings] Rules 2012 என்ற விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்த விதிமுறைகள்படி - அந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த 6 மாதங்களுக்குள், அந்த விதிமுறைகள் பட்டியலிட்டுள்ள பொது இடங்களில், CCTV கேமராக்கள் பொறுத்தப்படவேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் - மக்கள் பிரதிநிதிகள் இருந்த போது - இது சம்பந்தமாக தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டன.
இருப்பினும் - இன்றைய தேதி வரை, காயல்பட்டினம் நகராட்சி - 2012 ஆம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி ஆறு மாதங்களுக்குள் தன் கடமையையும் செய்யவில்லை; இது சம்பந்தமான நகர்மன்றதீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை; இது குறித்து - நாங்கள் கொடுத்த நினைவூட்டல் மனுக்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகரின் முக்கிய பேருந்து நிலைய வளாகத்தில் கொலை சம்பவம் - பல மாதங்களுக்கு முன்பு - நடந்துள்ளது; நகரின் பல இடங்களில் திருட்டுக்கள் நடந்துள்ளன; வேறு பல குற்றச்செயல்களும் நடந்து வருகின்றன. இருப்பினும் - பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் காயல்பட்டினம் நகராட்சி, சில ஆயிரம் ரூபாய் செலவில் - நகரின் பொது இடங்களில் - CCTV கேமரா பொருத்துவதில் - காவல்துறை மூலம் நினைவூட்டல்கள் வழங்கிய பிறகும் - அலட்சியம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.
எனவே - இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகியும், அவற்றை நடைமுறைக்கு கொண்டுவராமல் - பொதுமக்கள் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டிவரும் நகராட்சியை கண்டித்தும், உடனடியாக நகரின் அனைத்து பொது இடங்களில் CCTV கேமராக்கள் பொறுத்த காலக்கெடு விதித்தும் காயல்பட்டினம் நகராட்சிக்கு உத்தரவிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 5, 2018; 3:00 pm]
[#NEPR/2018020502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|