பலமுறை கோரியும் செவிசாய்க்காமல் – காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடியலுக்கு முன்பே தெரு விளக்குகளை அணைக்கும் காயல்பட்டினம் நகராட்சி குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் புகார் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
எமது 7.8.2017 தேதிய கடிதத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள தெரு விளக்குகள் - அதிகாலை நேரங்களில் சூரிய வெளிச்சம் வருவதற்கு முன்பே அணைக்கப்படுவது குறித்தும், மாலை நேரங்களில் சூரியன் மறைந்து பல நிமிடங்கள் கழித்தே தெருவிளக்குகள் போடப்படுவது குறித்தும் புகார் தெரிவித்திருந்தோம். மேலும் - அக்கடித்ததுடன், நகராட்சியின் பயன்பாட்டுக்காக, ஓர் ஆண்டுகள் - சூரியன் மறைவு, உதயம், அந்தி நேரங்கள் துவக்கம் ஆகிய விபரங்கள் அடங்கிய பட்டியலையும் வழங்கியிருந்தோம்.
இருப்பினும் - தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சியினால் - வெளிச்சம் வருவதற்கு முன்பே - தெரு விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இதனால் - அதிகாலைகளில் பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் பொது மக்கள், பல்வேறு ஆபத்துக்களை சந்திக்கிறார்கள். வெளிச்சம் வருவதற்கு முன்பே தெருவிளக்குகள் அணைக்கப்படுவதன் ஆபத்து குறித்து விளக்கிய பிறகும், இவ்விஷயத்தில் நகராட்சி அலட்சியம் காண்பிப்பது வருத்தத்தை அளிக்கிறது.
மேலும் - பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து, பல லட்சம் ரூபாய் செலவில் - தெருவிளக்குகளுக்கு TIMER பொறுத்தப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அது உண்மையென்றால் - ஏன் நகராட்சியினால், வெளிச்சம் வந்தபிறகு தெருவிளக்குகளை அணைக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை என்ற கேள்வியும், உண்மையாக அவ்வாறு கருவிகள் பொறுத்தப்பட்டு, முறையாக இயங்குகின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றன.
எனவே - விஷயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள காயல்பட்டினம் நகராட்சிக்கு உத்தரவிட கோரி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS அவர்களிடம், இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 5, 2018; 6:00 pm]
[#NEPR/2018020504]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|