காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் வெளிப்புறமாகக் கடந்து சென்ற தனியார் பேருந்து குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம், வட்டார போக்குவரத்து அலுவலக (RTO) அதிகாரி உறுதியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலையம் வளாகத்திற்குள் செல்லாமல் - நேராக செல்லும் வழமையை ஒரு சில அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் வைத்துள்ளன. சில நேரங்களில் - பேருந்து வளாகத்தில் உள்ள வேறு பேருந்துகளை முந்தி செல்வதற்காகவும், இவ்வாறு வேகமாக - வளாகத்திற்குள் செல்லாமல், நேராக சென்றிவிடுகின்றன.
இதனால் பயணியர்கள் பாதிப்புக்கு உள்ளாவது மட்டும் இல்லாமல், விபத்துகள் ஏற்படும் சூழலும் உருவாகிறது. இது சம்பந்தமாக கடந்த காலங்களில் *நடப்பது என்ன? குழுமம் சார்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு, ஒரு சில பேருந்துகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.*
புதனன்று (பிப்ரவரி 7) திருச்செந்தூர் செல்லும் சிவசக்தி என்ற தனியார் நிறுவனத்தின் பேருந்து, விபத்து ஏற்படும் விதமாக - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் செல்லாமல், வேகமாக, நேராக சென்றது. அருகில் குழுமியிருந்த பொதுமக்கள் பேருந்தை இடைமறித்து - ஓட்டுனரையும், நடத்துனரையும் கண்டித்தனர்.
இது குறித்து - திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO), நடப்பது என்ன? குழுமம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மூத்த அதிகாரி, பேருந்து நிறுவனத்தினை உடனடியாக தொடர்புக்கொண்டு எச்சரிக்கை விடுத்தார். மேலும் - துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும், நடப்பது என்ன? குழுமத்திடம் உறுதி அளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: பிப்ரவரி 10, 2018; 10:00 am]
[#NEPR/2018021002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|